பட்டங்கள், பதவிகள் பறிக்கப்பட்டும்... சகோதரரைக் கைவிடாத சார்லஸ் மன்னர்
இளவரசர் பட்டம் பறிக்கப்பட்டுள்ள ஆண்ட்ரூவிற்கு பிரித்தானிய அரச குடும்பம் பொருளாதார உதவிகள் மட்டும் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
செலவுகளைக் கட்டுப்படுத்த
சார்லஸ் மன்னரின் சகோதரர் தற்போது பட்டங்கள் மற்றும் பதவிகள் என அனைத்தும் பறிக்கப்பட்டு சாதாரண பிரித்தானியக் குடிமகன் மட்டுமாக மாறியுள்ளார்.

இருப்பினும், அரச குடும்பம் அவருக்கு ஒரு பெருந்தொகையை அளிக்க இருப்பதுடன், ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்டத் தொகையை அவரது வாழ்க்கைச் செலவுக்காகவும் அளிக்க முடிவு செய்துள்ளது.
இது தற்போதைய அவரது புதிய வாழ்க்கையில் செலவுகளைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் முயற்சி என்றே கூறப்படுகிறது. அரண்மனையில் இருந்து வெளியேறும் ஆண்ட்ரூ இனி நோர்போக் பகுதியில் குடியிருக்க முடிவு செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் ஆண்டு தோறும் உதவித்தொகை ஒன்றை சார்லஸ் மன்னர் அவரது தனிப்பட்ட நிதியில் இருந்து தமது சகோதரருக்கு அளிக்க இருக்கிறார். அத்துடன், பெருந்தொகை ஒன்றும் ஆண்ட்ரூவிற்கு அளிக்கப்பட உள்ளது.
ஆனால் அது குறித்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆண்ட்ரூ விவகாரத்தில் மன்னர் எடுத்துள்ள முடிவுக்கு பிரதமர் ஸ்டார்மர் முழு ஆதரவளிப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஸ்காட்லாந்து யார்டு பரிசீலனை
ஆண்ட்ரூவை வெளியேற்றுவது தொடர்பில் பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிவிப்புக்கு முன் அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்கப்பட்டது. மட்டுமின்றி, அரசியலமைப்பு ரீதியாக மன்னர் இந்த முடிவை எடுப்பது சரியானது என்றும் அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆண்ட்ரூ விவகாரத்தில் ஒரு தீர்வை எட்ட மன்னரின் மூத்த உதவியாளர்கள் அமைச்சரவை அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளனர். அத்துடன் பல அரசியலமைப்பு நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அதிர்ச்சி தகவலாக, முன்னாள் இளவரசரின் நடவடிக்கைகள் குறித்து புதிய குற்றவியல் விசாரணைகளைத் தொடங்க வேண்டுமா என்பது குறித்து ஸ்காட்லாந்து யார்டு பரிசீலித்து வருகிறது.
அத்துடன் ஆண்ட்ரூ தற்போது பிரித்தானிய பொலிசாரால் இரண்டு விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற சிக்கலில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |