இலவச வீட்டை வாடகைக்கு விட்டு வருவாய் பார்த்த இளவரசர் ஆண்ட்ரூ
Andrew received up to £2,000 per month from sub-letting: ஆண்ட்ரூ, தான் தங்கியிருந்த வீட்டின் சில பகுதிகளை வாடகைக்கு விட்டு மாதம் ஒன்றிற்கு 2,000 பவுண்டுகள் வரை வருவாய் ஈட்டியுள்ளார்.
பிரித்தானிய மன்னரின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவுக்கு, ராயல் லாட்ஜ் என்னும் மாளிகையில் வசிக்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த மாளிகையிலுள்ள சில வீடுகளை வாடகைக்கு விட்டு அதிலிருந்து அவர் வருவாய் பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ராயல் லாட்ஜ் என்னும் மாளிகை
மன்னர் ஆறாவது ஜார்ஜுக்காக கட்டப்பட்ட மாளிகை, ராயல் லாட்ஜ். அதில், மகாராணி முதலாம் எலிசபெத் 1952ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டுவரை வாழ்ந்துவந்தார்.

அதன்பின், 2004ஆம் ஆண்டு முதல் 2026ஆம் ஆண்டுவரை, அதில் இளவரசர் ஆண்ட்ரூ தன் குடும்பத்துடன் வாழ்ந்துவந்தார்.
ஏராளம் இளம் பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த மோசமான அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் ஆண்ட்ரூ தொடர்பிலிருந்த விடயம் வெளியானதால் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து, ராயல் லாட்ஜிலிருந்து பிப்ரவரி மாதம் வெளியேறினார் ஆண்ட்ரூ.
வாடகைக்கு விட்டு வருவாய் பார்த்த ஆண்ட்ரூ
ஆண்ட்ரூ ராயல் லாட்ஜை 75 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்திருந்தார். அவர் அந்த மாளிகையை புனரமைப்பதற்காக 7.5 மில்லியன் பவுண்டுகள் செலவிட்டதால், அவர் மாளிகைக்கு வாடகை செலுத்தவேண்டாம் என அவருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவர் அந்த மாளிகையிலுள்ள மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார் என்பது ராஜ குடும்ப சொத்துக்கள் மீதான பொதுக் கணக்குக் குழுவின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தானே வாடகை இல்லாமல் தங்கியிருந்த நிலையில், அந்த மாளிகையிலுள்ள மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டு, மாதம் ஒன்றிற்கு 2,000 பவுண்டுகள் வரை வருவாய் ஈட்டியுள்ளார் ஆண்ட்ரூ.
ராயல் லாட்ஜ், கிரௌன் எஸ்டேட் என்னும் ராஜ குடும்ப அமைப்புக்கு சொந்தமானது. அதிலிருந்து வாடகை வந்தால், அந்த வாடகை கிரௌன் எஸ்டேட்டுக்குதான் சென்றிருக்கவேண்டும். ஆனால், அந்த வாடகையை ஆண்ட்ரூவே எடுத்துக்கொண்டுள்ளார்.
20 ஆண்டுகள் ஆண்ட்ரூ அந்த மாளிகையில் வாழ்ந்த நிலையில், அந்த மூன்று வீடுகளும் தொடர்ச்சியாக வாடகைக்கு விடப்படவில்லை என்பதால், ஆண்ட்ரூ அந்த வீடுகளிலிருந்து எவ்வளவு வருவாய் ஈட்டியிருப்பார் என்பது சரியாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளது கிரௌன் எஸ்டேட்.
கிரௌன் எஸ்டேட் இது குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தகவலளித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் இதுபோல் நிகழாமல் பார்த்துக்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.