RAF ஃபேர்ஃபோர்ட் விவகாரம்... ஈரான் தொடர்பில் வலுவான அறிகுறிகள் இருப்பதாக ஆன்டி பர்னாம்
Andy Burnham says strong indications Iran played a part: ஈரான் இதில் பங்கு வகித்ததற்கான வலுவான அறிகுறிகள் உள்ளதாக ஆன்டி பர்னாம்.
குளோசெஸ்டர்ஷயரில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) தளத்தில் நடந்ததாகக் கூறப்படும் பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈரானுக்குப் பங்கு இருந்ததற்கான வலுவான அறிகுறிகள் இருப்பதாக ஆன்டி பர்னாம் கூறியுள்ளார்.
தொடர்பு இருப்பதாக
சமீப மாதங்களில் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்காக அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தி வரும் RAF ஃபேர்ஃபோர்டு தளத்திற்கு அருகே நடந்த சம்பவத்தில் வெளிநாட்டு சக்திகளுக்குத் தொடர்பு இருப்பதாக விசாரணை அதிகாரிகள் நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டத் தயங்க மாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். வெடிபொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம் ஆகிய சந்தேகத்தின் பேரில், 23 முதல் 25 வயதுக்குட்பட்ட ஐந்து பிரித்தானியர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டனர்; எனினும், அவர்கள் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், வெளிநாட்டு சக்திகள் இதில் ஈடுபட்டிருந்தனவா என்று கேட்கப்பட்டதற்கு, பிரதமர் பர்னாம் பிபிசியிடம், நாங்கள் அவ்வாறு நம்புகிறோம் என்று பதிலளித்தார்.
மேலும், கடந்த வார இறுதியில் RAF ஃபேர்ஃபோர்டில் நடந்த சம்பவத்தில் ஈரானுக்குப் பங்கு இருந்ததற்கான வலுவான அறிகுறிகள் உள்ளன, ஆனால் நிச்சயமாக இது ஒரு தொடர்ச்சியான, சிக்கலான மற்றும் தீவிரமான காவல்துறை விசாரணையாகவே உள்ளது என்றார்.
அந்தச் சம்பவத்தில் தங்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, திங்கள்கிழமையன்று ஈரான் அதில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தது.
இதனிடையே, ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அண்மைக்காலமாகத் தங்கள் குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்தி வரும் அமெரிக்காவுடன், பிரித்தானியா நெருக்கமாகப் பணியாற்றி வருவதாக பர்னாம் கூறியுள்ளார்.
பெரும் சேதத்தை
பிரித்தானியாவில் கைது நடவடிக்கைகள் நடந்த சிறிது நேரத்திலேயே, அந்த லண்டன் வாசிகள் பெரும் சேதத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்ததாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பின்னர், அவரது வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ ஒரு வெளிநாட்டு சதித் திட்டம் இதுவெனக் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தில் பிரதமர் பர்னாமின் கருத்துகள் வெளியாகும் வரை, இச்சம்பவத்தை பிரித்தானியா ஈரானுடன் தொடர்புபடுத்தியிருக்கவில்லை;
இருப்பினும், வெளிநாட்டு அரசின் ஈடுபாடு மற்றும் வெளிநாட்டு அரசு ஒன்றின் சார்பாகத் தெரிந்தே அல்லது தெரியாமலோ செயல்படும் இடைநிலை முகவர்களின் (proxies) பங்கு ஆகியவை குறித்த சாத்தியக்கூறுகளும் தங்கள் விசாரணையில் அடங்கியுள்ளதாக பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.