மிக விரைவில் இது நடக்கும்... மில்லியன் கணக்கான உயிரினங்கள் மடியும்: எச்சரிக்கும் நிபுணர்கள்
அடுத்த பத்தாண்டுகளில் வறட்சி, இயற்கை பேரழிவுகள் காரணமாக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான விலங்குகள் இறக்கும் நிலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெரும்பாலும் உழைப்புக்கு பயன்படுத்தும் குதிரை, கழுதை, ஒட்டகம், எருது, ஆனை ஆகிய 200 மில்லியன் விலங்குகள் மொத்தமாக இல்லாமல் போகும் என்கிறார்கள்.
இந்த விலங்குகளால் உலகெங்கிலும் 600 மில்லியன் அப்பாவி மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் ஆதாயம் அடைகின்றனர். ஆனால், பெருவெள்ளம், புயல், காட்டுத்தீ காரணமாக இந்த உழைக்கும் விலங்குகள் பாதிக்கப்படுவதுடன், அவைகளை நம்பியிருக்கும் அப்பாவி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது.
2020ல் மட்டும் ஏற்பட்ட புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் இந்தியாவில் மட்டும் 17,000 விலங்குகள் மரணமடைந்துள்ளன. மேலும் பெருவெள்ளம் காரணமாக ஆண்டுக்கு ஒரு மில்லியன் கால்நடைகள் உயிரிழப்பதாகவும் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதேப்போன்று, 2017ல் ஆப்ரிக்காவில் ஏற்பட்ட வறட்சி காரணமாக சோமாலியாவில் 80% கால்நடைகள் இறந்தன. இதே நிலை எதிர்காலத்தில் ஏற்படாமல் இருக்க, உலக நாடுகள் நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
வறட்சி மற்றும் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தினால் விலங்குகள் பெரும் துன்பத்தை அனுபவித்து, இறுதியில் மரணத்தை விரைவில் எதிர்கொள்ளும் என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.