இளவரசர் ஹரியைக் குறித்து ஊடகங்களுக்கு தகவல்களை லீக் செய்ததே அவரது நண்பர்கள்தான்: பரபரப்பு வாதம்
பிரித்தானிய ஊடக நிறுவனம் ஒன்று தன் தனியுரிமையை மீறியதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் இளவரசர் ஹரி.
ஆனால், இளவரசர் ஹரியைக் குறித்து ஊடகங்களுக்கு தகவல்களை லீக் செய்ததே அவரது நண்பர்கள்தான் என பரபரப்பு வாதம் ஒன்றை முன்வைத்துள்ளது அந்த ஊடகம்!
தனியுரிமை மீறல் வழக்கு
Daily Mail, Mail on Sunday மற்றும் MailOnline ஆகிய ஊடகங்களை வெளியிடும் Associated Newspapers Ltd (ANL) என்னும் நிறுவனம், தொலைபேசியை ஹேக் செய்தல் முதலான பல்வேறு சட்டவிரோத செயல்கள் மூலமாக, பல ஆண்டுகளாக தன்னைக் குறித்த தனியுரிமைத் தகவல்களை சேகரித்துவந்துள்ளதாக இளவரசர் ஹரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஊடக நிறுவனம் முன்வைத்துள்ள பரபரப்பு வாதம்
ஆனால், இளவரசர் ஹரியைக் குறித்து ஊடகங்களுக்கு தகவல்களை லீக் செய்ததே அவரது வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்தான் என பரபரப்பு வாதம் ஒன்றை முன்வைத்துள்ளது ANL ஊடக நிறுவனம்.
ஆம், ஹரியின் நண்பர்கள், கூட்டாளிகள், சில நேரங்களில், அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர்களிடமிருந்தே தாங்கள் தகவல்களை சேகரித்ததாக ANL நிறுவன சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள்.

சில நேரங்களில், விரும்பியும், சில நேரங்களில் தற்செயலாகவோ அவர்கள் தெரிவித்த தகவல்களைத்தான் ஊடகவியலாளர்கள் சேகரித்தார்கள் என்றும், அது சட்டவிரோதம் அல்ல, ஊடகங்களின் வழக்கமான வேலையே அதுதானே என்றும் அவர்கள் வாதம் முன்வைத்துள்ளார்கள்.
இளவரசர் ஹரி தரப்பு எதிர்வாதம்
இந்நிலையில், இப்படி தங்களுக்கு தகவல்களை லீக் செய்ததே நண்பர்கள்தான் என்னும் ANL நிறுவன சட்டத்தரணிகளின் வாதம், தனிப்பட்ட உறவுகள் மீது நம்பிக்கையின்மையையும் அச்சத்தையும் உருவாக்கும் என ஹரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தகவல்களை சேகரிக்க சில நேரங்களில் இப்படி நண்பர்கள், கூட்டாளிகள் என்னும் பதங்களை பயன்படுத்துவது ஊடகவியலாளர்களின் மூலோபாயம்தான் என்றும் ஹரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், இந்த வழக்கில் எந்த தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அது எதிர்காலத்தில் ஊடக நெறிமுறைகள், சமூக வலைப்பின்னல்கள் மற்றும் மறைமுகமான முறையில் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து அவற்றை தலைப்புச் செய்தியாக்குதல் போன்ற விடயங்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மட்டும் எவ்வித சந்தேகமுமில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |