அன்னபூர்ணா உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹொட்டல் உரிமையாளர் மன்னிப்பு கோரிய விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரியுள்ளார்.
பின்னணி என்ன?
கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் அன்னப்பூர்ணா குழுமத்தின் உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் கலந்து கொண்டார்.
அப்போது அவர், "காரத்திற்கும் இனிப்பிற்கும் வெவ்வேறு ஜிஎஸ்டி உள்ளது. இனிப்பிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி, காரத்திற்கு 12 சதவீத வரி இருக்கிறது.
பன்னுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை. ஆனால், அதில் க்ரீம் வைத்தால் 18 சதவீத ஜிஎஸ்டி வரி ஆகிவிடுகிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது" என்றார்.
இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், "ஹொட்டல் உரிமையாளர் தன்னுடைய பிரச்சனையை ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். அதில் தவறில்லை.
அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உணவுக்கும் எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆய்வு செய்து வருகிறது. உங்கள் கோரிக்கைபரிசீலனை செய்யப்படும்" என்றார்.
அண்ணாமலை மன்னிப்பு
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பொதுவெளியில் பாஜகவினர் பகிர்ந்ததற்காக அன்னபூர்ணா ஹொட்டல் உரிமையாளரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் தனது பதிவில், "அன்னபூர்ணா உணவகங்களின்உரிமையாளரான சீனிவாசனனுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
அன்னபூர்ணா சீனிவாசன் தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார்.
இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |