தன்னை சூப்பர் ஸ்டார் என்று அவர் நினைக்கிறார்.., அல்லு அர்ஜுனுக்கு அண்ணாமலை ஆதரவு
தான் ஒரு சூப்பர் ஸ்டார் என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நினைத்துக் கொள்கிறார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை பேசியது
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 4 -ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் வெளியான போது மக்கள் கூட்டம் அலைமோதியது.
அங்கு, அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், 35 வயதுடைய பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். அவரது மகன் மூளைச்சாவடைந்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், "தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் பேட்டி ஒன்றை பார்த்தேன்.
அவர் அங்கு, சூப்பர் ஸ்டார் ஆவதற்காக போட்டி போடுகிறார் என்று நினைக்கிறேன். நடிகர் அல்லு அர்ஜுனை விட பெரிய சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்று செயல்படுகிறார்.
மேலும் அவர் தன்னை ஒரு சூப்பர் ஸ்டார் என்று நினைத்துக் கொள்கிறார். அவரும் சினிமாவுக்கு சென்று நடித்து நிரூபித்தால் சண்டை போடலாம். ஆனால், அவர் அதிகாரத்தை பயன்படுத்திக் கொள்கிறார்.
அல்லு அர்ஜுன் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட பிறகும், அவரை துன்புறுத்துவது மற்றும் சட்டப்பேரவையில் அவரது பெயரை குறிப்பிட்டு பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தியேட்டருக்கு வந்தால் யாராவது உயிரிழப்பார்கள் என்று அல்லு அர்ஜுனுக்கு தெரியுமா? சட்டம் அனைவருக்கும் சமம் தான். ஆனால், ரேவந்த் ரெட்டி பேசியதில் நடுநிலைமை இல்லை" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |