வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.., தமிழிசை வீட்டிற்கே சென்று பேசிய அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்தார்.
வதந்தி
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக, தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அப்போது, தோல்வி குறித்து பேசிய தமிழிசை மற்றும் அண்ணாமலை எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
இதனால், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக பேசப்பட்டு வந்தது. இதனிடையே, விழா மேடைக்கு வந்த தமிழிசை சவுந்தரராஜனை அழைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டிக்கும் வகையில் பேசிய வீடியோ பரவியது.
தமிழிசைக்கும் அண்ணாமலைக்கும் இடையேயான பிரச்சனையை தவிர்க்கவே அவர் கண்டித்ததாக கூறப்பட்டது.
அண்ணாமலை சந்திப்பு
இந்நிலையில், பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சௌந்தரராஜன் இல்லத்திற்கு நேரில் சென்று அண்ணாமலை நலம் விசாரித்தார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான தமிழிசை இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த தமிழிசை, அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |