இஸ்ரேலியர்களால் கலவர பூமியான ஐரோப்பிய நாடு... மூன்று நாட்களுக்கு தடை: 60 பேர்கள் கைது
இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீது இரவில் பாலஸ்தீன ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நெதர்லாந்தில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை செய்ய்யப்பட்டுள்ளது.
நகரம் முழுவதும் துரத்தியடிக்கப்பட்டனர்
சம்பவத்தை அடுத்து இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்களை மீட்க விமானத்தை அனுப்பியது பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம். இந்த நிலையில், ஆம்ஸ்டர்டாம் மேயர் Femke Halsema தெரிவிக்கையில்,
இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் தாக்கப்பட்டனர், இழிவு செய்யப்பட்டனர், நகரம் முழுவதும் துரத்தியடிக்கப்பட்டனர் என்றார். இதனையடுத்து கலவரத் தடுப்பு பொலிசார் களமிறக்கப்பட்டு, இஸ்ரேலியர்கள் காப்பாற்றப்பட்டதுடன், அவர்களை பத்திரமாக ஹொட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் குறைந்தது ஐவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு 62 பேர்கள் இதுவரை கைதாகியுள்ளனர். அதில் 10 பேர்கள் பொலிஸ் காவலில் உள்ளனர்.
சமூக ஊடக பக்கங்களில் வெளியான காணொளிகளில், சில தாக்குதல்தாரிகள் இஸ்ரேலுக்கு எதிரான இழிச்சொற்களை பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. ஆனால் இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்களும் வியாழக்கிழமை கால்பந்து ஆட்டத்திற்கு முன்னதாக அரேபியர்களுக்கு எதிராக முழக்கமிட்டுள்ளனர்.
பாலஸ்தீனப் பகுதியான காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இருந்து நெதர்லாந்தில் யூத விரோத சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மட்டுமின்றி, பல யூத அமைப்புகள் மற்றும் பள்ளிகள் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்பு அஞ்சல்கள் தொடர்பில் புகாரளித்துள்ளன.
ஆர்ப்பாட்டங்கள் தடை
இதனிடையே, நெதர்லாந்து அரசாங்கம் மற்றும் தீவிர வலதுசாரி தலைவர் கீர்ட் வில்டர்ஸ் உடனான திடீர் சந்திப்புகளுக்காக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் Gideon Saar ஆம்ஸ்டர்டாம் சென்றார்.
இந்த நிலையில், வார இறுதியில் ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளதுடன் அமைதியின்மையை எதிர்கொள்ளும் வகையில் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியது.
காஸா மீதான இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் 43,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு மில்லியன் கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூடில் 1200 பேர்கள் கொல்லப்பட்டதாக பெஞ்சமின் நெதன்யாகு அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இதனிடையே, நெதர்லாந்தில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய குடிமக்கள் மீதான யூத-விரோத தாக்குதல்களால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக நெதர்லாந்து பிரதமர் டிக் ஷூஃப் கூறியுள்ளார்.
மட்டுமின்றி, குற்றவாளிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு தொலைபேசியில் உறுதியளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |