தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு
தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பேதோங்தான் சினவத்ரா பதவி நீக்கம்
கடந்த ஆகஸ்ட் 2024 முதல் தாய்லாந்தின் பிரதமராக பதவி வகித்து வந்தவர் பேதோங்தான் சினவத்ரா(Paetongtarn Shinawatra).
கம்போடியா நாட்டின் முன்னாள் தலைவரான ஹுன் சென் உடன் அவர் தொலைபேசியில் நடத்திய உரையாடலில், அவரை மாமா என அழைத்த ஆடியோ கசிந்து தாய்லாந்து அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இதன் காரணமாக ஆளும் கூட்டணியில் இருந்து முக்கிய கட்சியான பூம்ஜைதாய் கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியது.
இந்த விவகாரத்தில், கடந்த ஜூலை மாதம் பேதோங்தான் சினவத்ராவை பிரதமர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்தது தாய்லாந்து உச்சநீதிமன்றம்.
இதனையடுத்து, இடைக்கால பிரதமராக பும்தம் வெச்சாயாச்சாய் பதவி ஏற்றார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி பேதோங்தான் சினவத்ராவை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
அனுடின் சார்ன்விரகுல்
இதனையடுத்து, புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 492 எம்.பிக்கள் வாக்களித்ததில், 247க்கு அதிகமான வாக்குகள் பெற்று, அனுடின் சார்ன்விரகுல் (Anutin Charnvirakul) புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
58 வயதான அனுடின் சார்ன்விரகுல், பூம்ஜைதாய் கட்சியின் தலைவர் ஆவார்.
துணைப் பிரதமர், உள்துறை அமைச்சர், சுகாதார அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். கோவிட் காலத்தில், சுகாதார அமைச்சராக இருந்து சிறப்பாக பணியாற்றினார்.
4 மாதங்களில் பாராளுமன்றத்தை கலைத்து, தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மக்கள் கட்சி ஆதரவளித்துள்ளது.
மன்னர் வஜிரலோங்கோர்னின் முறையான நியமனம் பெற்ற பிறகு அவர் மற்றும் அவரது தலைமையிலான அரசாங்கம் பதவி ஏற்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |