ஜனவரி 20 அமெரிக்காவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: சிக்கலில் பிரதான சமூக ஊடக செயலி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆதரவாளர்களால் பரவலாக பயன்படுத்தப்படும் பார்லர் சமூக ஊடக செயலிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டுவிட்டருக்கு பதிலாக டிரம்ப் ஆதரவாளர்களால் பரவலாக பயன்படுத்தப்படும் சமூக ஊடக செயலியாகும் பார்லர்.
தற்போது அமெரிக்காவில் வன்முறையை தூண்டும் கருத்துகளை வெளியிட்டதாக கூறி, பார்லர் நிறுவனத்திற்கு கூகிள் மற்றும் அப்பிள் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
குறித்த செயலியை பயன்படுத்தியே புதன்கிழமை டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட ஆட்களை திரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனையடுத்து கூகிள் நிறுவனம் தங்கள் செலலிகளுக்கான தளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை பார்லர் செயலியை இடைநீக்கம் செய்துள்ளது.
இதே வேளை அப்பிள் நிறுவனம் 24 மணி நேர கால அவகாசம் அளித்துள்ளதுடன், பார்லர் நிறுவனம் விரிவான அறிக்கை ஒன்றை தங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை டுவிட்டர் நிர்வாகம் டிரம்பின் கணக்கை மொத்தமாக முடக்கிய நிலையில், பார்லர் செயலியை பதிவிறக்கம் செய்யப்படுவதும், கருத்துப்பரிமாற்றம் பல மடங்கு அதிகரித்ததாகவும் கூகிள் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த செயலியில் டிரம்ப் ஆதரவாளர்கள் பலர், வன்முறையை தூண்டும் கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளனர். ஜனவரி 20 அன்று எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும், தலைநகரை நோக்கி அன்றைய தினம் மில்லியன் போராளிகளின் அணிவகுப்பு நடத்தப்படும் எனவும் அதில் பதிவிடப்பட்டுள்ளது.
ஆனால், பயனர்களின் கருத்துகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது எனவும், பார்லர் வளர்ந்து வரும் நிறுவனம் எனவும், கூகிள் போன்ற ஜாம்பவான்கள் தங்களை முடக்க திட்டமிடுவதாக பார்லர் நிறுவனம் பதிலளித்துள்ளது.
குறிப்பாக சந்தேகத்திற்கிடமான ஒரு சூழ்நிலையை நாங்கள் அறிந்து கொள்ளும் வரை நாங்கள் பயனர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் பார்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது.