நடிகர் ரஜினிகாந்த உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரத்த அழுத்தத்தில் மாற்றம் உள்ளதால் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவருக்கு ரத்த அழுத்தத்தைச் சீர் செய்யச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீராக உள்ளது.
இன்று மேற்கொள்ளப்பட்ட சில பரிசோதனைகளின் முடிவுகள் வந்துள்ளன, அதில் அச்சப்படும் வகையில் எதுவும் இல்லை. இன்னும் சில பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்.
மீதமுள்ள பரிசோதனை முடிவுகள் மற்றும் ரஜினிகாந்தின் இரத்த அழுத்த நிலை பற்றிய அறிக்கைகளின் அடிப்படையில், மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவது தொடர்பாக நாளை காலை முடிவு செய்யப்படும் என்று அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.