ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம்
ஜனாதிபதி ட்ரம்பின் வரி யுத்தத்தை முறியடிக்க, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து 5 விமானங்களில் ஐபோன்கள் மற்றும் தங்கள் இதரப் பொருட்களை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவிற்கு கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிரடி நகர்வு
மார்ச் மாத இறுதியில் மூன்று நாட்களில் இந்த அதிரடி நடவடிக்கையில் ஆப்பிள் நிறுவனம் இறங்கியதாக கூறப்படுகிறது. 10 சதவீத அடிப்படை வரியை தவிர்த்து, தற்போதைய அதே விலையை தற்காலிகமாக நீடிக்க செய்வதே ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அதிரடி நகர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
வெளியான தகவலின் அடிப்படையில், ட்ரம்பின் பதிலடி வரிகள் அமுலில் இருந்தபோதிலும், இந்தியாவிலோ அல்லது பிற சந்தைகளிலோ சில்லறை விலைகளை அதிகரிக்கும் திட்டம் ஆப்பிள் நிறுவனத்திடம் இல்லை என்றே கூறப்படுகிறது.
இருப்பினும் பாதிப்பைக் குறைக்க, ஆப்பிள் நிறுவனம் இந்தியா மற்றும் சீனாவில் உள்ள உற்பத்தி மையங்களிலிருந்து சரக்குகளை விரைவாக அமெரிக்காவிற்கு மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய உற்பத்தி மீது
மேலும், தற்போதைய இந்த கையிருப்பு ஆப்பிள் பொருட்களின் தற்போதைய விலையை தற்காலிகமாக பராமரிக்க அனுமதிக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது. சீனா மீது மீண்டும் 50 சதவீத வரி விதிக்க இருப்பதாக ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், சீனாவிலிருந்து அதிக உற்பத்தியை மாற்ற வேண்டிய நிலைக்கு ஆப்பிள் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.
சீனா மீது தற்போது 54 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதால், ஆப்பிள் நிறுவனம் இந்திய உற்பத்தி மீது கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இந்தியா மீது 26 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
அமெரிக்காவிற்கு இந்தியாவின் கிட்டத்தட்ட 9 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் பெரும்பகுதியை ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |