iPhoneல் சாஃப்ட்வெர் அப்டேட்(Software Update) செய்வது எப்படி?
சாஃப்ட்வெர் அப்டேட் என்பது எதற்காக தேவைப்படுகிறது? உங்கள் ஐபோனில் சாஃப்ட்வெர் அப்டேட் செய்வது எப்படி என்பதை இந்த கட்டுரை நாம் தெரிந்துகொள்ளலாம்.
ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC) ஒரு பெரிய மென்பொருள் புதுப்பிப்பை (Software Update) வெளியிடுகிறது. மேலும், ஆண்டு முழுவதும் பல சிறிய அப்டேட்களை வெளியிடுகிறது.
உங்கள் ஐபோனில் புதிய அம்சங்கள் மற்றும் கூடுதல் வசதிகள் கொடுப்பதற்காகவும், ஏற்கெனவே இருக்கும் சாஃப்ட்வெர் பிரச்சினைகளை சீரமைப்பதற்காவதும் இந்த அப்டேட்கள் கொடுக்கப்படுகின்றன.
ஐபோன் பயனர்கள் தங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை ( privacy and security) அப்படியே வைத்திருக்க, எப்போதும் அப்டேட் நிலையில் வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது.
அதனால், ஒவ்வொரு புதிய அப்டேட் வெளியிடப்படும்போதும், அந்த அப்டேட் பொருந்தக்கூடிய அனைத்து ஐபோன் கைபேசிகளிலும் ஆப்பிள் நிறுவனம் ஒரு அறிவிப்பை அனுப்புகிறது. அதேபோல் பயனர்களும் தாங்களாகவே சென்று தங்கள் போனுக்கு அப்டேட் இருக்கிறதா என சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம்.
உங்கள் ஐபோன் மென்பொருளை எவ்வாறு மேம்படுத்துவது?
உங்கள் ஐபோனில் சாஃப்ட்வெரை அப்டேட் செய்ய பல வழிகள் உள்ளன. அதில் மிக எளிய வழி, உங்கள் ஐபோனில் சாஃப்ட்வெர் அப்டேட் செட்டிங்ஸை Automatic என தெரிவுசெய்துகொள்வது.
அப்படி செய்திருந்தால், ஒவ்வொருமுறை புதிய அப்டேட்கள் வெளியிடப்படும்போதும், உங்கள் ஐபோன் இரவில் நீங்கள் சார்ஜ் செய்யும் நேரத்தில் தானாகவே அப்டேட் செய்துகொள்ளும்.
குறிப்பு: அப்டேட் ஆக இன்டர்நெட் தேவைப்படும், அதற்கு உங்கள் போனை Wi-Fiல் இணைத்திருக்கவேண்டும்.
அதற்கு பதிலாக, நீங்களே உங்கள் கைப்பட அப்டேட் செய்ய விரும்பினால் அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று Wi-Fi மூலம் செய்வது, மற்றொன்று ஆப்பிள் Mac கணினியைப் பயன்படுத்துவது.
இரண்டு செயல்முறைகளும் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், உங்கள் ஐபோனை நீங்கள் அப்டேட் செய்ய தொடங்குவதற்கு முன், அதிலிருக்கும் உங்கள் தரவுகளை காப்புப் பிரதி எடுக்க வேண்டியது அவசியம்.
Wi-Fi மூலம் அப்டேட் செய்வது எப்படி?
1. முதலில் உங்கள் ஐபோனை சார்ஜருடன் இணைக்கவும். உங்கள் Wi-Fi இணைப்பு வலுவாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதிசெய்க. இதற்கு Wi-Fi நிச்சயம் தேவை, மொபைல் இன்டர்நெட் இணைப்பு மூலம் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்க.
2. உங்கள் ஐபோனில், Settings > General > Software Update-க்கு செல்லவும்.
3. அதில் புதிய அப்டேட் இருப்பதாக காண்பித்தால், iOS புதுப்பிப்பு மற்றும் அதன் சேஞ்ச்லாக் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படும். திருப்தி அடைந்ததும், அங்கு இருக்கும் Download and Install என்ற ஆப்ஷன் க்ளிக் செய்யவும். அப்டேட்டுக்கு தேவையான பதிவிறக்கம் இப்போது தொடங்கும். வேகம் உங்கள் இணைய இணைப்பு எவ்வளவு வேகமாக உள்ளது என்பதைப் பொறுத்தது.
4. பதிவிறக்கம் முடிந்ததும் Install Now என்பதைத் தட்டவும். நீங்கள் அதை பிறகு செய்துகொள்ளலாம் என நினைத்தால் Later என க்ளிக் செய்யலாம். அதிலும் Install Tonight மற்றும் Remind Me Later என இரண்டு தெரிவு விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. Install Tonight என க்ளிக் செய்தால், அது தானாகவே இரவில் இன்ஸ்டால் ஆளாகிவிடும். Remind Me Later என்றால், பிறகு உங்ககளுக்கு அறிவிக்கும்.
5. இன்ஸ்டால் செயல்முறையைத் தொடங்குவதற்கு முன் ஐபோன் உங்கள் Password அல்லது கைரேகையைக் கேட்கலாம். அதற்கு தேவையான தகவலை உள்ளிட வேண்டும்.
6. இன்ஸ்டாலேஷன் முடிந்ததும், ஐபோன் (reboot) தானாகவே ஆஃப் ஆகி ஆன் ஆகும்.
உங்கள் Mac கணினியைப் பயன்படுத்தி ஐபோனை அப்டேட் செய்வது எப்படி?
வயர்லெஸ் முறை உங்களுக்கு வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் கணினியைப் பயன்படுத்தி அப்டேட் செய்ய முயற்சிக்கலாம். நீங்கள் புதுப்பிப்பதற்கு முன் உங்களுக்கு Wi-Fi அல்லது ஈதர்நெட் நெட்வொர்க் தேவைப்படும்.
1. சார்ஜிங் கேபிள் வழியாக உங்கள் iPhone அல்லது iPad-ஐ உங்கள் Mac கணினியுடன் இணைக்கவும். உங்கள் கணினி Catalina 10.15 OS-ஐ கொண்டிருந்தால், அதில் Finder-ஐ திறக்கவும். மாறாக Mojave 10.14 OS கொண்ட கணினியாக இருந்தால் iTunes-ஐ திறக்கவும்.
2. உங்கள் ஐபோன் கணினியில் லோடான பிறகு, General அல்லது Settings என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, Check for Update என்பதைக் கிளிக் செய்க.
3. உங்களுக்கு அப்டேட் இருக்குமெனில், Download and Update என்பதைக் கிளிக் செய்க.
4. தேவைப்பட்டால் உங்கள் password-ஐ உள்ளிடவும். மீதமுள்ள செயல்முறைகளை முடிக்க கணினியில் காட்டும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.