ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.5,622 கோடி அபராதம் - ஏன் தெரியுமா?
ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.5,622 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன், ஐபேட், மேக் மட்டுமல்லாது ஆப்பிள்வாட்ச் சாதனத்தையும் வெளியிட்டு வருகிறது.

இந்த ஆப்பிள் வாட்ச்சில், இரத்த ஓட்டத்தை கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளது.
ரூ.5,622 கோடி அபராதம்
இந்த இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு தொழில்நுட்பத்தில், தங்களது காப்புரிமையை மீறியுள்ளதாக மருத்துவ சாதன தயாரிப்பாளரான மாசிமோ கார்ப்பரேஷன் ஆப்பிள் மீது வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த கலிபோர்னியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நடுவர் மன்றம், ஆப்பிள் நிறுவனம் காப்புரிமை விதிகளை மீறியதாக கூறி 634 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.5,622 கோடி) இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பு வழங்கியது.
இந்தத் தீர்ப்பு 2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கு இடையே விற்கப்பட்ட சுமார் 43 மில்லியன் கடிகாரங்களை உள்ளடக்கியது.
"எங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி" என மாசிமோ தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஆப்பிள் நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2023 ஆம் ஆண்டில், காப்புரிமை மீறலைக் கண்டறிந்த அமெரிக்க சர்வதேச வர்த்தக ஆணையம் சில ஆப்பிள் வாட்ச் ,மொடல்களின் இறக்குமதியைத் தடை செய்தது.
இதனால் ஆப்பிள் இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு அம்சங்களை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர் ஆப்பிள் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |