முகமது நபி குறித்த சர்ச்சை பேச்சு! இந்தியாவிற்கு 15 நாடுகள் கண்டனம்.. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கடும் நெருக்கடி
முகமது நபி மீது பாஜக செய்தி தொடர்பாளர் சர்ச்சை கருத்துக்களை கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் 15 நாடுகள் இதற்கு வெளிப்படையான கண்டனங்களை தெரிவித்துள்ளன.
பாஜகவின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்களான நுபூர் சர்மா, நவீன் குமார் ஆகியோர் முகமுது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருப்பது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவுதி அரெபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவுகள், லிப்யா, இந்தோனேசியா ஆகிய 15 நாடுகள் இந்திய அரசுக்கு எதிராக தங்களது அதிகாரப்பூர்வ எதிர்ப்பினை தெரிவித்துள்ளன. இதை கண்டித்துள்ள அந்த நாடுகள், இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
VIDEO: Superstores in Kuwait remove Indian products from their shelves after remarks on the Prophet Mohammed by an official in India's ruling party prompted calls on social media to boycott Indian goods pic.twitter.com/AD1J3wTY2g
— AFP News Agency (@AFP) June 6, 2022
சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்த பாஜக நிர்வாகிகளுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன. இதற்கு மத்தியில், விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கூறப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் எந்த விதத்திலும் இந்திய அரசின் கருத்துகளை பிரதிபலிக்கவில்லை. அவை, குறிப்பிட்ட ஒரு கும்பலின் கருத்து மட்டுமே என தெரிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளின் அழுத்தத்திற்கு மத்தியில், இரண்டு செய்தி தொடர்பாளர்களையும் பாஜக கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியா தனது தரப்பு விளக்கத்தை அளித்திருந்தாலும், பாஜக செய்தி தொடர்பாளரின் பேச்சு இந்நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்வினையாக இந்தியர்களை பணிநீக்கம் செய்வது இந்திய தயாரிப்புகளைப் புறக்கணிப்பது உள்ளிட்ட செயல்களில் இறங்கியுள்ளன. இந்திய தயாரிப்புகளை புறக்கணிக்குமாறு சமூக வலைதளங்களில் இஸ்லாமிய நாட்டினர் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
இந்தியாவில் இருந்து இடம்பெயர்ந்துள்ள இந்தியர்கள் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அரபு நாடுகளில் வசித்து வருகின்றனர். பாஜகவினரின் இந்த பேச்சால் பலரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
அதே போல வெளிநாட்டு இந்தியர்களால் இந்தியாவிற்கு வரும் பணத்தின் மூலமாக இந்தியாவிற்கு பல பில்லியன் டொலர்கள் வருமானம் கிடைக்கும் நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் இந்த வருவாய் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.