அவர்கள் வாக்குகளுக்கு மதிப்பில்லை... அரபு கட்சிகளின் ஆதரவை நிராகரிக்கும் யூத இஸ்ரேலிய அணி
Jewish Israeli blocs reject Palestinian support: யூத இஸ்ரேலியக் கூட்டணிகள் பாலஸ்தீனத்தின் ஆதரவை நிராகரிக்கின்றன.
இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதன்மையான இரு கூட்டணிகளும் இஸ்ரேலில் உள்ள அரபு கட்சிகளின் ஆதரவை நிராகரித்துள்ளன.
தேர்தலைத் திருடும் முயற்சி
இஸ்ரேலின் சியோனிச எதிர்க்கட்சி எனத் தங்களை அடையாளபப்டுத்திக்கொள்ளும் பலதரப்பட்ட கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி மிகப்பெரிய ஒற்றைக் கட்சியாக 27 ஆசனங்களை வென்றிருந்தாலும், அதன் தேர்தல் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான ஆசனங்களைப் பெறவில்லை.
தற்போது இந்த இரு முதன்மையானக் கூட்டணிகளும், 19 ஆசனங்களை வென்றுள்ள அரபு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலில் அரபு கட்சிகளின் கூட்டணி என்பது விலக்கப்பட்ட ஒன்று என்றே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் அமைந்துள்ள ஒரு கட்சி மட்டும் அரபு கட்சிகளுடன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அரபு கட்சிகள் இந்த முறை 19 ஆசனங்களை வெல்லக் காரணம் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் தொடர்பிலான கோபமும், அதன் ஆளும் கூட்டணியின் வெளிப்படையான இனவாதவுமே என ஆய்வாளர்கள் விளக்கமளிக்கின்றனர்.
இதனாலையே, இஸ்ரேலின் பாலஸ்தீனியக் குடிமக்கள் பெருமளவில் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று அரபு கட்சிகளுக்கு வாக்களித்துள்ளனர். இஸ்ரேலில் வாக்களிக்கத் தகுதியுள்ள பாலஸ்தீனிய வாக்காளர்களில் சுமார் 80 சதவீதம் பேர் செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

இது, மொத்த மக்கள் தொகையில் சுமார் 21 சதவீதத்தைக் கொண்ட ஒரு சமூகத்தின் பங்கேற்பில் ஏற்பட்ட பெரும் உயர்வாகும். இதனால் 120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அரபு கட்சிகள் 19 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இருப்பினும், அந்த மாபெரும் ஆதரவை அங்கீகரிப்பதற்குப் பதிலாக, இஸ்ரேலின் முன்னணி அரசியல்வாதிகள், ஒன்று அவர்களின் வாக்குகளை வெளிநாட்டுத் தலையீட்டின் காரணமாக நிகழ்ந்ததாகக் கூறி செல்லாததாக்க முயன்றுள்ளனர்; அல்லது, பாலஸ்தீனியர்கள் தங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்துவதை, தேர்தலைத் திருடும் முயற்சியாக எப்படியாவது சித்தரிக்க முயன்றுள்ளனர்.
அரபு கட்சிகளுடன் கூட்டணி
இந்த நிலையில், நெதன்யாகுவின் ஆளும் லிகுட் கட்சி, பாலஸ்தீனியர்களின் பெருமளவிலான வாக்குப்பதிவில் வெளிநாட்டுத் தேர்தல் தலையீடு இருந்திருக்க வாய்ப்புள்ளதா என்பதை விசாரிக்குமாறு இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு சேவையான ஷின் பெட்டைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு செய்வதன் மூலம், நெதன்யாகு தரப்பு அரபு வாக்குகளின் சட்டப்பூர்வத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியதோடு, அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் எதிர்கால முயற்சிகளையும் களங்கப்படுத்தியுள்ளனர்.
நெதன்யாகுவின் அரசாங்கத்தை ஊழல் நிறைந்தது, திறமையற்றது மற்றும் இஸ்ரேலின் சர்வதேச நற்பெயருக்குக் கேடு விளைவிப்பதாகக் கண்டித்தபோதிலும், அவரை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கான அரபு கட்சிகளின் ஆதரவை ஏற்க, இஸ்ரேலின் சியோனிச எதிர்க்கட்சிகளில் பெரும்பகுதி தயக்கம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், இடதுசாரி ஜனநாயகக் கட்சியினரே அரபு கட்சிகளுடன் ஒத்துழைக்க அதிக வாய்ப்புள்ளது. அதே வேளையில், மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் அத்தகைய கூட்டணியை எதிர்த்துள்ளனர் அல்லது பாலஸ்தீனிய வாக்காளர் பங்கேற்பில் ஏற்பட்ட திடீர் உயர்வை வெளிநாட்டு சக்திகள் திட்டமிட்டு உருவாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரிக்க மறுக்கின்றனர்.
தேர்தல் நாள் இரவில், முன்னாள் பிரதமர்களான நஃப்தாலி பென்னட் மற்றும் யாயிர் லாபிட் ஆகியோர், தங்களின் குறுகிய கால 2021-22 அரசாங்கத்தின் போது அரபு கட்சிகளின் ஆதரவைச் சார்ந்திருந்தபோதிலும், தற்போது அரசாங்கத்தில் அவர்களுடன் இணைந்து ஆட்சி நடத்துவதை நிராகரித்துள்ளனர்.
அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில், நெதன்யாகு ஆதரவு அணிக்கு 53 ஆசனங்களும், நெதன்யாகு எதிர்ப்பு யூத எதிர்க்கட்சி அணிக்கு 48 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
அரபு கட்சிகளின் வசம் உள்ள 19 ஆசனங்களைக் கணக்கில் கொண்டால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நெதன்யாகுவுக்கு எதிராகவே உள்ளது.