அரக்கோணம் இரட்டைக்கொலை: சாதிவெறிக்கும்பலை.... கொந்தளித்த சீமான்
அரக்கோணத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இருவரைப் பச்சைப்படுகொலை செய்திட்ட சாதிவெறிக்கும்பலை உடனடியாகக் கடும் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரக்கோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுனன், சூர்யா ஆகிய இருவரும் சாதிவெறிக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமடைந்தேன்.
இத்தோடு, மூவர் தாக்குதலுக்கு ஆட்படுத்தப்பட்டு பெருத்த காயங்களோடு சிகிச்சைப் பெற்று வரும் செய்தியும் தாங்கொணாத் துயரைத் தருகின்றது.
இளைஞர்களான அர்ஜூனன், சூர்யா ஆகிய இருவரையும் இழந்து ஆற்ற முடியாப் பெருஞ்சோகத்தில் மூழ்கித் திளைக்கும் அவரது குடும்பத்தினரை எதனைச் சொல்லித் தேற்றுவது எனத் தெரியாது கலங்கித் தவிக்கிறேன்.
தமிழ்ச்சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதி என்கிற கொடிய நோயை அறவே ஒழித்தால்தான் இதுபோன்ற மனித இனத்திற்கு அப்பாற்பட்டக் கொடூரங்கள் நிகழாமல் இருக்கும்.
ஆகவே, இருவரைப் பச்சைப்படுகொலை செய்து, மூவரைத் தாக்கிய அந்த கொலைவெறிக் கும்பலை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்.
அவர்களுக்கு எவ்விதச் சலுகையோ, பரிவோ காட்டப்படாது, எவ்வித விதிவிலக்கும் அளிக்கப்படாது அவர்கள் எந்த அரசியல் பின்புலத்தைக் கொண்டவர்களாக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து கைதுசெய்து உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
அரக்கோணத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இருவரைப் பச்சைப்படுகொலை செய்திட்ட சாதிவெறிக்கும்பலை உடனடியாகக் கடும் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும்!https://t.co/QiWmHAdDVw
— சீமான் (@SeemanOfficial) April 9, 2021
இதன்மூலம் தமிழகம் முழுவதும் ஏற்பட்டிருக்கும் தேவையற்றப் பதற்றநிலையைத் தணிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முடுக்கிவிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துவதாக சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
