முதலீடு செய்தால் குடியுரிமை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ள அர்ஜென்டினா
argentina announce citizenship by investment: தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினா, பணம் மற்றும் முதலீட்டுக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
முதலீட்டின் மூலம் குடியுரிமை வழங்கும் அர்ஜென்டினா
பாரிஸில் நடைபெற்ற "அர்ஜென்டினா வாரம்" வணிக நிகழ்வில், பொருளாதார அமைச்சர் லூயிஸ் கபுடோ மற்றும் அமைச்சரவை தலைவர் டியேகோ சாண்டில்லி ஆகியோர் முதலீட்டின் மூலம் குடியுரிமை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர் .

இந்த திட்டப்படி, திரும்பப் பெற முடியாத 3,50,000 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.3.38 கோடி) பங்களிப்பு அல்லது 8,00,000 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.7.70 கோடி) பொதுப் பத்திரத்தை வாங்குவதன் மூலம் குடியுரிமை வழங்கப்படும்.
மேலும், விண்ணப்பதாரரின் வாழ்க்கைத் துணை மற்றும் திருமணமாகாத, சொந்தமாகக் குழந்தைகள் இல்லாத, 18 முதல் 25 வயதுக்குட்பட்ட அவர்களது பிள்ளைகள் 100,000டொலர் (இந்திய மதிப்பில் ரூ.96.32 லட்சம்) பங்களிப்பதன் மூலம் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் 25,000 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.24.08 லட்சம்) பங்களிப்பதன் மூலமும் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

அதே போல், வாழ்க்கைத் துணை மற்றும் 2 சிறு குழந்தைகள் அடங்கிய ஒரு சராசரிக் குடும்பம், மொத்தமாக 5,00,000 டொலர் (இந்திய மதிப்பில் ரூ.4.81 கோடி) செலுத்தி அர்ஜென்டினா குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான விண்ணப்பம் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.