வேகமெடுக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.., இயக்குநர் நெல்சன் மனைவியிடம் பொலிஸார் விசாரணை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குநர் நெல்சன் மனைவியிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 -ம் திகதி மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஆஜரான கூலிப்படையினர், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே கொலை செய்தோம் என்று தெரிவித்தனர். இந்த வழக்கில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக சமீபத்தில், ரவுடி நாகேந்திரன் மகனும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை பொலிஸார் கைது செய்தனர்.
மேலும், பல ரவுடிகள் இந்த வழக்கில் தொடர்பில் இருக்கலாம் என்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, வேலுர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை பொலிஸார் கைது செய்த நிலையில், தற்போது வரை மொத்தம் 23 பேர் கைதாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வந்த நிலையில் 24 -வது நபராக பொலிஸார் அவரை கைது செய்தனர்.
பின்னர், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். அவரை செப். 2-ம் திகதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெல்சன் மனைவி
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக திரைப்பட இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் என்பவருடன் தொலைபேசியில் மோனிஷா பேசியதாக தகவல் வெளிவந்த நிலையில் பொலிஸார் விசாரணை செய்துள்ளனர்.
மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் தப்பிய நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார்களா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தபட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |