"கொன்றுவிடுவார்கள் என பயந்தேன்" கறுப்பின இராணுவ அதிகாரிக்கு நேர்ந்த பயங்கரம்! அமெரிக்க பொலிஸ் மீது வழக்கு பதிவு
அமெரிக்காவில் தகுந்த காரணமின்றி தன்னை தாக்கியதற்காகவும், அச்சுறுத்தியதற்காகவும் இரண்டு போக்குவரத்து பொலிஸார் மீது கறுப்பின இராணுவ அதிகாரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனக்கு எதிராக துப்பாக்கிகளைக் காட்டி அச்சுறுத்தியதற்காகவும், முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே தெளித்ததற்காகவும் அவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் திகதி நடந்த இந்த சம்பவத்தின் பொலிஸ் பாடிகேம் வீடியோ வெளியாகியுள்ளது.
தற்போது சேவையில் இருக்கும் இராணுவ இரண்டாம் லெப்டினன்ட் Caron Nazario, சம்பவத்தின்போது, அவரது இராணுவ சீருடையில் இருக்கிறார்.
அவர் காரில் தனது வளர்ப்பு நாயையும் அசகித்துக்கொண்டு சென்றுள்ளார்.
அவர் ஓட்டிவந்த காரில் நம்பர் பிளேட் பொருத்தப்படவில்லை. ஆனால், தற்காலிகமாக ஒரு நம்பர் பிளேட்டை Nazario தனது காரில் பார்வைக்கு வைத்திருந்தார்.
இருப்பினும், காரை உடனடியாக நிறுத்தும்படி இரண்டு போக்குவரத்து அதிகாரிகள் அவரை துரத்தியுள்ளனர்.
செய்வதறியாது Caron Nazario ஒரு பாதுகாப்பிற்காக அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் காரை நிறுத்தியுள்ளார். அப்போது போக்குவரத்து பொலிஸார் இருவரும் தங்களது துப்பாக்கியைக் காட்டி மிரட்டி காரிலிருந்து இறங்கி தரையில் மண்டியிடுமாறு அவரை உத்தரவிட்டுள்ளனர்.
கீழே இறங்கினால் எங்கே தன்னை சுட்டு கொன்றுவிடுவார்களோ என்று அச்சப்பட்டுள்ளார். என்ன நடக்கிறது என்பது புரியாத Caron Nazario, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறி பணிவாக விளக்கம் கேட்டுள்ளார்.
பின்னர் தான் ஒரு இராணுவ லெப்டினன்ட் என்று கூறியும், எந்த விசாரணையும் இன்றி முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்து, தரையில் முட்டிபோட வைத்து கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று எந்த வழக்கும் எழுதப்படாமல் அவரை அனுப்பியுள்ளனர்.
பின்பு ஏன் இவ்வளவு வன்முறையாக தன்னை கைது செய்தீர்கள் என லெப்டினன்ட் கேட்டதற்கு "நீங்கள் சரியாக ஒத்துழைக்கவில்லை அதனால்தான்" எனக் கூறியுள்ளனர்.
இந்நிலையில், Joe Gutierrez and Daniel Crocker எனும் அந்த இரண்டு அதிகாரிகள் மீதும் Virginia-வில் உள்ள Norfolk மாவட்ட நீதிமன்றத்தில் Caron Nazario தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
