54 ஆண்டுகளுக்கு பின் நிலவை நோக்கி செல்லும் மனிதர்கள் - ஆர்டெமிஸ் 2 திட்டம் என்ன?
கடைசியாக 1972 ஆம் ஆண்டில் அப்போலோ 17 குழுவினர் நிலவில் கால் பதித்தனர். அதன் பிறகு மனிதர்கள் யாரும் சந்திரப்பகுதிக்கு செல்லவில்லை.
இப்போது மீண்டும் 54 ஆண்டுகளுக்கு பின் சந்திரப்பகுதிக்கு நோக்கிய மனிதர்கள் புறப்பட்டுள்ளனர்.
ஆர்டெமிஸ் 2 திட்டம்
நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் ஓரியன் விண்கலம் சந்திரப்பகுதியை நோக்கி புறப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4 மணியளவில் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஓரியன் விண்கலம் புறப்பட்டது.
இதில், ஆர்டெமிஸ் 2 திட்டக் குழுவின் தலைவர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளோவர், மிஷன் சிறப்புப் பணியாளர் கிறிஸ்டினா கோக், கனடாவை சேர்ந்த மற்றொரு சிறப்புப் பணியாளர் ஜெரமி ஹான்சன் ஆகிய 4 பேர் பயணிக்கின்றனர்.

சந்திரப் பயணத்துக்குச் செல்லும் முதல் கருப்பின விண்வெளி வீரர், முதல் பெண் விண்வெளி வீரர், மேலும் ஆழ்விண்வெளிக்குச் செல்லும் முதல் கனடியர் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.
ஆனால் இவர்கள் நிலவில் தரையிறங்கப்போவதில்லை. மாறாக நிலவை சுற்றி வர உள்ளனர்.
2,000 கி.மீ உயரம் வரை பூமியை சுற்றியுள்ள பகுதி தாழ் விண்வெளி பகுதி ஆகும். அப்போலோ 17 பயணத்திற்கு பின்னர் இந்த பகுதியை தாண்டி யாரும் செல்லவில்லை.
இந்த ஆர்டெமிஸ் 2 பயணத்தில் அந்த எல்லையைக் கடந்து செல்ல உள்ளனர்.
வீரர்களின் செயல்பாடுகள்
இந்த 10 நாள் பயணத்தில், 330 சதுரஅடி அளவுள்ள ஓரியன் விண்கலத்தின் உள்ளே 4 பேரும் வசிக்க வேண்டும். இவர்கள் எந்த நேரமண்டலத்தையும் பின்பற்றமாட்டார்கள்.
தினமும் காலையில் கண்விழித்ததும் விண்கலத்தில் உள்ள தண்ணீர் சுத்திகரிப்பு அமைப்பு, கழிவறை, அவசர உபகரணங்கள் உள்ளிட்ட விண்கல கருவிகளின் செயல்பாடு சரியாக செயல்படுகிறதா என சோதனை செய்யவேண்டும்.
பிறகு விண்கலம் செல்லும் திசையை கண்காணித்து தேவைப்பட்டால் அதனை சரி செய்ய வேண்டும்.

அதன் பின்னர் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். மாக்கரோனி சீஸ், பார்பிக்யூ மாட்டிறைச்சி, கேக் உள்ளிட்ட 189 விதவிதமான உணவுகளும், காபி உட்பட 10க்கும் மேற்பட்ட பானங்களையும் இந்த பயணத்துக்காக நாசா தேர்வு செய்துள்ளது.
ஆர்டெமிஸ் II பயணத்தின் அதிகாரப்பூர்வ நிலவுச் சின்னமாக தேர்வு செய்யப்பட்ட Rise பொம்மையையும் செல்கின்றனர். இதனை கலிஃபோர்னியாவை சேர்ந்த 8 வயது சிறுவன் வடிவமைத்துள்ளான். இது வீரர்களுக்கு பூஜ்ஜிய ஈர்ப்பு விசை காட்டியாக செயல்படும்.

மேலும், உங்கள் பெயரை விண்வெளிக்கு அனுப்புங்கள் என்ற பிரச்சாரம் மூலம் கிடைக்கப்பெற்ற 56 லட்சம் பெயர்களை SD கார்டில் சேமித்து இந்த விண்கலத்தில் கொண்டு செல்லப்பட உள்ளது.
10 நாட்களும் குளிக்கமாட்டார்கள். ஈரத் துணிகள், உடல் துடைப்புத் துணிகள், ஆகியவற்றைப் பயன்படுத்தி கொள்வார்கள். கழிவறை கழிவுகளை மூடிய பையில் சேகரித்து விண்வெளியில் வீசி விடுவார்கள்.
பயணத்திட்டம்
விண்கலம் ஏவப்பட்ட 20 நிமிடங்களில் விண்வெளிப்பாதையை அடைந்து, விண்கலத்தில் அனைத்து சோதனைகளையும் மேற்கொள்வார்கள். இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் பூமிக்கு திரும்பிவிட முடியும்.
பயணத்தின் 2வது நாளில், ஏவூர்தி இயக்கப்பட்டு, அதில் கிடைக்கும் ஆற்றல் விண்கலனை நிலவை நோக்கித் தள்ளும். இந்த கட்டத்தை எட்டி விட்டால், நிலவை சுற்றி விட்டு தான் மீண்டும் பூமிக்கு திரும்ப முடியும்.
5 அல்லது 6வது நாளில் மனித வரலாற்றில் அதிக தூரம் சென்ற சாதனையை படைக்க உள்ளனர். அப்பல்லோ 13 மனிதர்களுடன் பூமியிலிருந்து 4 லட்சம் கிலோமீட்டர் தொலைவு சென்றதே அதிகபட்சமாக உள்ளது.
6வது நாளில் நிலவின் மறுபக்கத்தை காண உள்ளனர். இந்த 30 - 60 நிமிடங்களில் விண்கலத்திற்கும், கட்டுப்பட்டு மையத்திற்கு இடைப்பட்ட தொலைவு துண்டிக்கப்படும். இந்த நேரத்தில் நிலவின் மறுபக்கத்தை புகைப்படம் மற்றும் வீடியோ, தேவையான குறிப்புகளை எடுத்துக்கொள்வார்கள்.
அதன் பின்னர் விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டு, 4 நாட்களுக்கு பின்னர் கலிபோர்னியா அருகிலுள்ள பசிபிக் பெருங்கடலில் இறங்கும்.
சீனாவிற்கு முன்னதாக அமெரிக்கா இலக்காக வைத்துள்ளது. ஆர்டெமிஸ் 4 திட்டத்தில் மனிதர்கள் நிலவில் கால் பாதிக்க உள்ளனர். அது ஆர்டெமிஸ் 2வின் வெற்றியை பொறுத்தே உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |