ஈழத்தமிழ்ப்பெண் புகாரில் நேரில் ஆஜராகி பேசிய ஆர்யா.. வீடியோவாக பதிவு
ஜேர்மனியை சேர்ந்த ஈழத்தமிழ்ப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ரூ.70 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் ஆர்யா காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள ஆர்யா நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக ஜேர்மனியின் சுகாதாரத்துறையில் பணிபுரியும் விட்ஜா என்ற பெண்ணுடன் வாட்ஸ் அப் மூலம் பழகி காதலித்ததாகக் கூறப்படுகின்றது.
இடையில் பல படங்கள் சறுக்கியதால் தனக்கு உதவும்படி ஆர்யா கேட்டுக் கொள்ள, வருங்காலக் கணவர் தானே என உதவும் நோக்கத்தில் வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் மூலம் 71 லட்சம் ரூபாய் வரை பணம் கடனாக கொடுத்ததாக விட்ஜா தெரிவித்திருந்தார்.
பணம் வாங்கும்வரை வாட்ஸ் அப்பில் காதல் மொழி பேசிய ஆர்யா, அந்த பெண் திருமணம் செய்து கொள்ள நெருக்கடி கொடுத்ததும் அவரை அவதூறாக பேசி நட்பை துண்டித்ததாகவும், ஜேர்மனியில் இருப்பவர் எப்படி தன்னிடம் பணத்தை திரும்ப பெற்றுவிட முடியும் என்ற எண்ணத்தில், தன்னை கைவிட்டு நடிகை சாயிஷாவை திருமணம் செய்த ஆர்யாவுக்கு எதிராக ஆதாரத்துடன் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு விட்ஜா புகார் அனுப்பியிருந்தார்.
மேலும் சிபிசிஐடி பொலிசார் தன்னுடைய புகாரை விரைவாக விசாரிக்கவும், தன்னிடம் பெற்ற பணத்தில் அவர் நடித்த படங்களுக்கும் தடைவிதிக்கவும் கோரி விட்ஜா சார்பில் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி பொலிசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், வழக்கை நீண்ட நாள் கையில் வைத்திருந்த சென்னை மத்திய குற்றபிரிவு பொலிசார் தற்போது கையில் எடுத்துள்ளனர்.
மேலும் வருகிற 18ம் திகதி விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதால் ஆர்யாவுக்கு மத்திய குற்றப்பிரிவு பொலிசார் சம்மன் அனுப்பினர்.
சம்மனையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றபிரிவு பொலிசில் நேற்று ஆஜரான ஆர்யாவிடம் காவல் ஆய்வாளர் கீதா விசாரணை மேற்கொண்டார்.
பணம் பெற்றதற்கான வாட்ஸ் அப் சாட்டிங்கில் ஆர்யா கூறிய படி, வெஸ்டர் யூனியன் மணி டிரான்ஸ்பரில் அவரது உதவியாளர் பெயரில் பணம் அனுப்பியது உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பொலிசாரிடம் ஆதாரமாக விட்ஜா தரப்பில் கொடுக்கப்பட்ட நிலையில் ஆர்யாவிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
அதன் பின்னர் ஆர்யா அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். விட்ஜாவின் புகார் குறித்து முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தேவைப்பட்டால் மீண்டும் ஆர்யா விசாரணைக்கு ஆஜராவார் என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
ஆனால் தற்போதுவரை விட்ஜாவுடனான தொடர்பு குறித்தும், கடன் பெற்றாரா? இல்லையா? என்பது குறித்தும் ஆர்யா எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.
இதனிடையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆர்யா அளித்த பதிலை வீடியோவாகவும், எழுத்து பூர்வமாகவும் பொலிசார் பெற்றுக் கொண்டதாக தெரியவந்துள்ளது.