உலகக்கோப்பை டெஸ்ட் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் இல்லை! கொந்தளிப்பில் ரசிகர்கள்
அவுஸ்திரேலியாவுடன் இன்று தொடங்கியுள்ள உலகக்கோப்பை டெஸ்டின் இறுதிப்போட்டியில், தமிழக வீரர் அஸ்வின் இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இந்தியா
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதும் ஐசிசி உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டனின் ஓவல் மைதானத்தில் தொடங்கியுள்ளது.
நாணய சுழற்சியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெற்றி பெற்றார். மைதானத்தின் தன்மை மற்றும் காலநிலையை ஆராய்ந்து அவர் பந்துவீச்சை தெரிவு செய்தார்.
Reuters
ஆனால், களமிறங்கும் இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் இல்லை என அவர் அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அவர் முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் என 4 பேரை களமிறக்கியுள்ளார். ரவீந்திர ஜடேஜா எனும் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளரை மட்டுமே பயன்படுத்தும் திட்டத்துடன் இந்திய அணி தற்போது பந்துவீசி வருகிறது.
கொந்தளிப்பில் ரசிகர்கள்
இருப்பினும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஸ்வின் அணியில் இடம்பெறாததால் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த தொடரில் அஸ்வின் 13 போட்டிகளில் 61 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இதன்மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற அவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
அதிலும் முக்கியமாக ஏனைய இந்திய பந்துவீச்சாளர்களை விட அவர் தான் அதிக விக்கெட்டுகளை இந்த சாம்பியன்ஷிப் தொடரில் கைப்பற்றியுள்ளார்.