ஆசியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா: ஹாங்காங், சிங்கப்பூரில் தீவிர பரவல்!
உலகையே உலுக்கிய கொரோனா தொற்று ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் மீண்டும் பரவ தொடங்கியுள்ளது.
ஆசியாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா
உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக, மக்கள் நெருக்கம் மிகுந்த ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இதன் தாக்கம் தீவிரமாக இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலக நாடுகள் அனைத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியது. லட்சக்கணக்கான உயிர்களை பலி கொண்டதுடன், வல்லரசு நாடுகளின் பொருளாதாரத்தையும் நிலைகுலையச் செய்தது.
அந்தப் பேரலையின் தாக்கத்திலிருந்து பல நாடுகள் தற்போதுதான் மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், ஆசியாவில் மீண்டும் கொரோனா பரவுவது கவலை அளிக்கிறது.
ஹாங்காங், சிங்கப்பூரில் தீவிர பரவல்
ஹாங்காங்கில் கொரோனாவின் தற்போதைய பரவல் மிகவும் தீவிரமாக உள்ளதாக அந்நகரின் சுகாதார மைய தொற்று நோய் பிரிவின் தலைவர் ஆல்பர்ட் ஆவ் தெரிவித்துள்ளார்.
அங்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதம் கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இருப்பினும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு மருத்துவத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
மே மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு சுமார் 28% உயர்ந்து 14,200 ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் சுமார் 30% அதிகரித்துள்ளது.
மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதே இந்த திடீர் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |