தப்பியோடிய அசாத்துக்கு தஞ்சமளித்த நாடு: வெளிவரும் புதிய தகவல்
பஷார் அல்-அசாத் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதை அடுத்து கிளர்ச்சியாளர்கள் பிடியில் சிக்காமல் இருக்க சிரியாவை விட்டு வெளியேறிய நிலையில் தனது குடும்பத்துடன் மாஸ்கோவில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிளர்ச்சியாளர்கள் படை
இன்று காலை 5 மணியளவில் டமாஸ்கஸுக்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் படை 24 ஆண்டு கால அசாத் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன், அரசு தொலைக்காட்சி வளாகம், சர்வதேச விமான நிலையம் மற்றும் முக்கிய அரசாங்க அலுவலகங்களின் கட்டுப்பாட்டையும் கைப்பற்றியது.
அரசாங்க இராணுவம் மற்றும் ஊழியர்கள் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறினர், அதே நேரத்தில் அசாத் சிரியாவிலிருந்து ரஷ்ய தயாரிப்பு விமானத்தில் புறப்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் திடீரென்று அந்த விமானம் ரேடாரில் இருந்து மாயமானதாக கூறப்பட்ட நிலையில், கிளர்ச்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது.
ரஷ்யாவில் தஞ்சம்
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலில், அசாத் தமது குடும்பத்துடன் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதை ரஷ்ய ஊடகம் ஒன்றும் உறுதி செய்துள்ளது.
கிளர்ச்சியாளர்கள் தளபதி ஹசன் அப்தெல் கானி தலைமையிலான படை டமாஸ்கஸ் நகரை கைப்பற்றியதுடன், பொதுமக்களும் அசாத் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த இராணுவத்தினரும் இனி சிரியாவின் ஆட்சியை முன்னெடுப்பார்கள் என அறிவித்தார்.
இதனிடையே, பொறுப்புகளை ஒப்படைக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சிரிய பிரதமர் முகமது காசி ஜலாலி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |