சொந்த பெயர்களே நினைவில் இல்லை... அசாத் சித்திரவதைக்கு சிக்கிய மக்களின் பரிதாப நிலை
சிரியாவில் அசாத் ஆட்சியில் சிறை தண்டனை அனுபவித்த பலருக்கு சொந்த பெயர்களே நினைவில் இல்லை. மக்களை சித்திரவதைக்கு உட்படுத்திய அதிகாரிகளை தற்போது தீவிரமாக தேடி வருகின்றனர்.
குளோரின் வாயு தாக்குதலில்
அசாத் குடும்பத்தினரின் 53 ஆண்டு கால ஆட்சியில், சிரியா வெளியுலகில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதாகவே கூறுகின்றனர். ஆனால் தற்போது கொடூர ஆட்சியின் கீழ் நடந்த கொடூரமான குற்றங்கள் இறுதியாக வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுகின்றன.
சிரியாவில், குறிப்பாக கவுட்டா என்ற பகுதியில் மரணம் என்பது வழக்கமான நிகழ்வாகவே இருந்துள்ளது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதியானது 2018ல் இரசாயன தாக்குதலுக்கு இலக்கானது.
விமானப்படை ஹெலிகொப்டரில் இருந்து இரண்டு மஞ்சள் சிலிண்டர்கள் கீழே வீசப்பட்டன. பொதுவாக வான் தாக்குதலுக்கு பழக்கப்பட்ட மக்களால், குளோரின் வாயு தாக்குதலில் இருந்து தப்ப முடியாமல் போனது.
குளோரின் வாயு காற்றை விட கனமாக இருப்பதால், மாடிகள் மற்றும் கட்டிடங்களுக்கு கீழே இரண்டு அடித்தளங்களில் வரை வியாபித்தது. இந்த கொடூரமான வாயு தாக்குதலால் குறைந்தது 43 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
டூமா பிராந்தியத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த கடைசி கிளர்ச்சிக் குழுவும், எரிவாயு தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து அசாத் ஆட்சியிடம் சரணடைந்தது. அசாத் ஆட்சியின் மனிதாபிமானமற்ற தாக்குதலைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக டூமா மக்கள் அமைதியாக வருந்தினார்.
தற்போது அசாத் ரஷ்யாவுக்கு ஓடி ஒளிந்த நிலையில், தங்கள் அனுபவித்த துயரங்களை அந்த மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். குளோரின் வாயு தாக்குதலை அடுத்து அவர்களின் உடல் கருப்பாக மாறியது, அவர்களின் ஆடைகள் பச்சை நிறமாகி எரிந்து, உடலோடு ஒட்டிக்கொண்டன.
அடையாளம் தெரியவில்லை
துப்பாக்கி குண்டுகளுக்கும் டாங்கிகளுக்கும் பயப்படாத மக்கள், இரசாயன வாயு தாக்குதலுக்கு அஞ்சியதாக ஒருவர் தெரிவித்துள்ளார். அசாத் ஆட்சி காலத்தில் மொத்தமாக 300,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 100,000 பேர்கள் மாயமாகியுள்ளனர்.
இரசாயன வாயு தாக்குதல், தெருக்களில் அசாத் ராணுவத்தால் கொல்லப்படுவதுடன் பலர் கைதாகி மிக மோசமான சிறைகளில் சித்திரவதைக்கு தள்ளப்பட்டுள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தங்கள் உற்றார் உறவினர்களைத் தேடி தற்போது மக்கள் மருத்துவமனைகள் தோறும் அலைகின்றனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பலருக்கும் தங்கள் அடையாளம் தெரியவில்லை என்றும் சொந்த பெயரே நினைவில் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இளைஞர் ஒருவருக்கு தமது கைதி எண் மட்டுமே நினைவில் இருப்பதாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிலருக்கு பேச்சு வரவில்லை என்றும் அச்சத்தில் இருந்து அவர்களால் தற்போதும் விடுபட முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |