ஆடி மாதத்தில் அம்மனையும், முருகனையும் வணங்கும் முறை!
'ஆடி செவ்வாய் தேடிக் குளி - அரைத்த மஞ்சள் பூசி குளி" என்பது பழமொழி. ஆமாம்.. ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் திருமணமான பெண்கள் மஞ்சள் பூசி குளித்து வந்தால் அவர்களுடைய மாங்கல்யம் பலம் சேரும் என்பது ஐதீகம்.
ஆண்டு தோறும் வரும் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் தினமும் விழாகோலம்தான். ஆடி மாதம் வந்துவிட்டாலே அடுத்தடுத்து பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் வரும்.
ஆடி மாதங்களில் பெண்கள் விரதம் மேற்கொள்வார்கள். ஒவ்வொரு ஆடி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் தோஷம் இருப்பவர்கள் விரதம் இருந்தால் அவர்களுக்கு திருமண தடை விலகும்.
சுமங்கலி பெண்களின் கணவன்களின் ஆயுள் நீடிக்குமாம். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கடைசி செவ்வாய்க்கிழமை அன்று குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களை தெய்வமாக வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிட்டுமாம்.
மேலும், அந்த குழந்தைகளுக்கு புதிய உடைகள் வாங்கி கொடுப்பர். சுமங்கலி பெண்கள் கணவன் ஆரோக்கியமாக வாழ, வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள், காசு மற்றவர்களுக்கு கொடுப்பர்.
சரி... ஆடி மாதத்தில் அம்மனையும், முருகனையும் வணங்கும் முறைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம் -
இந்த வருடம் ஆடி மாதம் ஜூலை 18, 25 ஆகஸ்டு 1, 8, 15-ம் தேதிகளில் செவ்வாய்க்கிழமை வருகிறது.
இந்த 5 செவ்வாய்க்கிழமைகளில் அம்மனை வழிபட்டு விரதம் இருந்தால் விசேஷ பலன்கள் கிடைக்கும். மேலும், இந்த 5 ஆடி செவ்வாய்கிழமைகளில் அன்னதானம் செய்தால் நன்மைகள் 48 மடங்கு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
இந்த அன்னதானத்தில் அனைத்துவித காய்கறிகளையும் ஒன்றாக சேர்த்து சமைத்த சாப்பாடு கொடுக்கலாம். ஆடி மாதத்தில் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், அங்காரக தோஷம், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது நன்று. ஆடி மாதத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை எழுந்து சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
மேலும், அம்மனை செண்பக மலர் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும். காலையில் அம்மனையும், மாலையில் முருகனையும் வழிபட்டு வந்தால் நிச்சயம் சுபம்தான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |