நாடுகடத்தப்படுவதை எதிர்த்து 30 புகலிடக்கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதம்
பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு நாடுகடத்தப்பட உள்ள 30 புகலிடக்கோரிக்கையாளர்கள், பிரித்தானியாவில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகிறார்கள்.
One in, one out திட்டம்
சிறுபடகுகள் மூலம் பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரான்சுக்கே திருப்பி அனுப்புவதற்காக பிரித்தானியாவும் பிரான்சும் One in, one out திட்டம் என்னும் திட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அதன்படி, இதுவரை நூற்றுக்கும் அதிகமான சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள்.
புகலிடக்கோரிக்கையாளர்கள் உண்ணாவிரதம்
இந்நிலையில், இன்று வியாழக்கிழமை பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட இருக்கும் 30 புகலிடக்கோரிக்கையாளர்கள், திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதம் இருந்துவருகிறார்கள்.
பிரித்தானியாவுக்குள் நுழைந்த சிலர் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். எங்களைப்போன்ற சிலர் மட்டும் பிரான்சுக்கு அனுப்பப்பட உள்ளார்கள்.
நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அப்படியிருந்தும் எங்களை மட்டும் ஏன் இப்படி நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை என்கிறார்கள் உண்ணாவிரதம் இருக்கும் சிலர்.
திருப்பி அனுப்பப்படுவோம் என்னும் பயத்துடனேயே நாட்களை செலவிட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு பிரான்சிலும் பாதுகாப்பு இல்லை, எங்கள் சொந்த நாட்டிலும் பாதுகாப்பு இல்லை என்கிறார் ஒருவர்.
Ed Ram/The Guardian
குற்றவாளிகளைப் போல நடத்தப்படுவதாலேயே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தோம் என்று கூறும் மற்றொருவர், நாங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே இந்த நாட்டுக்கு வந்தோம், நாங்கள் சமுதாயத்துக்கோ அல்லது யாருக்கும் எதிராக எந்த தவறும் செய்யவில்லை.
நாங்கள் சாதாரண மக்கள், நாங்கள் சுதந்திரமாக வாழ விரும்புகிறோம், எங்கள் மனித உரிமைகளும் பாதுகாப்பும் எங்களுக்கு வேண்டும் என்கிறார் ஒருவர்.
புலம்பெயர்தல் ஆதரவு அமைப்புகளும் உண்ணாவிரதம் இருக்கும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துவருகின்றன.
ஆனால், அவர்களை இன்று பிரான்சுக்கு அனுப்ப பிரித்தானிய உள்துறை அலுவலகம் திட்டமிட்டுள்ள நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |