ஜேர்மனி மீது தாக்குதல் நடத்துவோம்: ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை...
ஜேர்மனி மீது தாக்குதல் நடத்துவோம் என ரஷ்யாவின் மூத்த பாதுகாப்புத்துறை அலுவலர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதனால் இந்த எச்சரிக்கை?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது நினைவிருக்கலாம்.
அதாவது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கென தனியாக பொலிசார் கிடையாது.
ஆகவே, புடின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒப்பந்தத்தின் கீழிருக்கும் ஏதாவது ஒரு நாட்டில் கால் வைத்தால், அவரை அந்த நாடு கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவேண்டும்.
ஜேர்மன் அமைச்சர் தெரிவித்த கருத்து
இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஜேர்மன் நீதித்துறை அமைச்சரான Marco Buschmann, புடின் ஜேர்மனிக்கு வருகை புரிவாரானால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புடினுக்கு பிறப்பித்துள்ள கைது வாரண்ட் காரணமாக, அவர் கைது செய்யப்படுவார் என தெரிவித்திருந்தார்.
இந்த விடயம் ரஷ்யாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, ரஷ்யாவின் பாதுகாப்புக் கவுன்சிலின் துணைச் செயலரான Dmitry Medvedev (57), ஜேர்மன் நீதித்துறை அமைச்சரான Marco மீது தன் கோபத்தைக் காட்டியுள்ளார்.
அணு ஆயுத நாடு ஒன்றின் தலைவர் ஒருவர் ஜேர்மனிக்குச் செல்லும்போது அங்கு அவர் கைது செய்யப்படுவாரானால், அது ரஷ்யாவுக்கெதிராக போர் பிரகடனம் செய்ததற்கு சமமாக கருதப்படும் என்று கூறியுள்ள Medvedev, அப்படி ஒரு சூழல் ஏற்படுமானால், ஜேர்மன் நாடாளுமன்றம், சேன்ஸலரின் அலுவகலம் முதலான இடங்கள் தாக்கப்படும் என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.