கனடாவிலும் தமிழ்வழி சைவநெறி வழிபாடு முன்னெடுப்பு முயற்சி
சுவிற்சலாந்து நாட்டின் பேர்ண் நகரத்தில் அமைக்கப்பட்டு, தமிழ்வழி சைவநெறி வழிபாட்டுடன் சிறப்புற இயங்கி வருகின்றது ஞானலிங்கேஸ்வரர் கோவில்.
இந்தக் கோவிலை நிறுவியவர்களுள் ஒருவரும் கோவிலின் குருக்களுமாக விளங்கும் சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்களும் பல்சமய வழிபாட்டு ஒருங்கிணைப்பு மையத்தின் இணைப்பாளரான திருமதி லூயிஸ் அவர்களும் கனடாவுக்கு வருகை தந்திருந்தனர்.
குடிவரவாளர்கள் எதிர்கொள்ளும் குடியேற்றம், மொழி, பண்பாடு, வழிபாடு தொடர்பான அடையாளப் பேணல்களை முன்னெடுப்பதற்குக் கனடா அரசு எவ்வாறு உதவுகின்றது? குடிவரவாளர்கள் சமூகமாக எதிர்கொள்ளும் சவால்கள் எவை? என்பவை தொடர்பில் ஆய்வுசெய்யும் நோக்கில் இவர்கள் வருகை அமைந்திருந்தது.
கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 28,2023) அன்று பிற்பகல், சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் அவர்கள் தமிழ் ஆர்வலர்களைச் சந்தித்த நிகழ்வு ஸ்காபரோவில் Frontline சமூகக்கூடத்தில் நடைபெற்றிருந்தது.
இச்சந்திப்பின்போது, “தமிழர்களாகிய நாம் தமிழ்க் கடவுளரை எமது தாய்மொழியிலேயே வழிபடுவது பக்திஉணர்வுக்கு நெருக்கமானது. தூய இறைவுணர்வை எமக்குள் ஏற்படுத்தவல்லது.
எம்மிடையே இருக்கும் தேவாரம், திருவாசகம், திருமந்திரம், சித்தாந்தங்கள் உள்ளிட்ட அனைத்து இறைவழிபாட்டு பாடல்களும் வழிமுறைகளுமே தமிழ் வழிபாட்டு முன்னெடுப்புப்புக் போதுமானவை. தொடக்கத்தில் நாம் எதிர்ப்புகளையும் பெருஞ் சவால்களையும் சந்தித்தோம். இன்று எமது திருவிழாக்களுக்கு ஏறக்குறைய 8000க்கு மேற்பட்ட மக்கள் கூடுகின்றார்கள்.
இனத்துக்குள் இருக்கும் எல்லைகள் கடந்தும் தீட்டுகள், துடக்குகள் என்ற வைதீகக் கட்டுப்பாடுகள் இன்றியும் வழிபட வருவோர் அனைவருக்குமாக எமது கோவில் வாசல் திறந்திருக்கின்றது. மக்கள் பெருவாரியாக வருகின்றார்கள். ஆதரவு தருகின்றார்கள்.
ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளிலும் தமிழ்வழி வைவநெறி வழிபாட்டு கோவில்கள் உருவாகின்றன. கனடாவிலும் இந்த மரபு தோற்றுவிக்கப்பட வேண்டும்” என சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் கூறினார்.
நிகழ்வை நெறிப்படுத்திய கல்வியாளர் பொன்னையா விவேகானந்தன், “பெயர்வுநாடுகளில் வளர்கின்ற இளந்தலைமுறையினர், தமிழ்வழிப்பட்டவர்களாக இருப்பதற்கு, வழிபாடுகளில் தாய்மொழி முழுமையான இடத்தைப் பெறவேண்டும். இல்லையேல் மொழியை மட்டுமல்ல, அடையாளங்களையும் எமது தலைமுறையினர் இழக்க நேரிடும்” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து அங்கு கூடியிருந்தோர், பல்வகை வினாக்களினூடாகக் கலத்துரையாடலில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தமிழ்வழி சைவநெறி வழிபாட்டுக்கான முன்னெடுப்புகளை எவ்வாறு தொடங்குவது என்ற விடயங்களும் அங்கு ஆராயப்பட்டன. திருமதி லூயிஸ் அவர்களும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் வருகை, கனடாவில் தமிழ்வழி சைவநெறி வழிபாட்டைப் தோற்றுவிப்பதற்கான முன்முயற்சியாக அமைந்தது.