தோல்வியுடன் 100வது போட்டியில் விடைபெற்ற இலங்கை வீரர்! டெஸ்ட் தொடரை வென்ற அவுஸ்திரேலியா
காலியில் நடந்த 2வது டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.
கடைசி டெஸ்ட்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் காலியில் நடந்தது.
முதல் இன்னிங்சில் இலங்கை அணி 257 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 414 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 231 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
அதிகபட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 76 ஓட்டங்களும், குசால் மெண்டிஸ் 50 (54) ஓட்டங்களும் எடுத்தனர். குஹனேமன், லயன் தலா 4 விக்கெட்டுகளும், வெப்ஸ்டர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அதனைத் தொடர்ந்து 75 ஓட்டங்கள் வெற்றி இலக்காக அவுஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலியா 1 விக்கெட் இழப்பிற்கு 75 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. உஸ்மான் கவாஜா 27 (44) ஓட்டங்களும், லபுஷேன் 26 (39) ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. கேரி ஆட்டநாயகன் விருதையும், ஸ்டீவன் ஸ்மித் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
திமுத் கருணரத்னே
தனது கடைசி டெஸ்டில் (100வது போட்டி) விளையாடியது குறித்து பேசிய இலங்கை திமுத் கருணரத்னே, "நான் உணர்ச்சிவசப்படுகிறேன். இது ஒரு நீண்ட வாழ்க்கை. நான் என் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டேன். அதனால் அவர்களை விட்டு வெளியேறும்போது நான் உணர்ச்சிவசப்படுகிறேன்.
ஆனால், நான் எங்கு சென்றாலும் நான் எப்போதும் அவர்களுக்கு ஆதரவளிப்பேன். நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 10000 ஓட்டங்கள் எடுப்பதுதான் எனது ஒரே இலக்காக இருந்தது" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |