அவுஸ்திரேலியாவில் ஒரே நேரத்தில் காட்டுத்தீ, பெருவெள்ளம்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
காட்டுத்தீ மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு அவுஸ்திரேலியாவை புரட்டிப் போட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
அவுஸ்திரேலியாவின் கிழக்கு பகுதியில் ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் திடீர் காட்டுத்தீ பாதிப்புகளை தொடர்ந்து அதனை சுற்றியுள்ள மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவசரகால சேவைகள் அறிவுறுத்தியுள்ளன.
அவுஸ்திரேலிய அவசர கால மீட்பு படையினர், ஒருபுறம் விக்டோரியா மாகாணத்தில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
மறுபுறம் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கொட்டித் தீர்த்த கனமழை
அத்துடன் வியாழக்கிழமை விக்டோரியாவின் தென்மேற்குப் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியில் வெறும் 24 மணி நேரத்தில் சுமார் 186 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மெல்போர்ன் நகருக்கு தென்மேற்கே உள்ள Wye river பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கார்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது.
ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இரண்டு கார்கள் வெள்ளிக்கிழமை காலை கடலில் பாதி மூழ்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் தற்போது பெய்து வரும் கனமழை காட்டுத்தீயை ஓரளவு கட்டுப்படுத்தினாலும் வெள்ள பாதிப்பினால் ஏற்படக்கூடிய மண்சரிவு மற்றும் அதன் ஆபத்துக்கள் குறித்து அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றம் மாறி வரும் காலநிலை சவால்களை பிரதிபலிப்பதாக அவசர கால மேலாண்மை ஆணையர் டிம் வைபுஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |