செய்தி நிறுவனங்களுக்கு நிதியளிக்க Meta, Google மீது வரி விதிக்கும் அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலிய அரசு, மெட்டா, கூகுள், டிக்டாக் போன்ற டிஜிட்டல் நிறுவனங்களின் வருவாயில் ஒரு பகுதியை வரியாக வசூலித்து, அதை செய்தி நிறுவனங்களுக்கு வழங்கும் சட்ட முன்மொழிவை வெளியிட்டுள்ளது.
இந்த சட்டம் ஜூலை 2-ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், “செய்தியாளர்களின் உழைப்புக்கு மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். பெரிய நிறுவனங்கள் அவர்களின் படைப்புகளை இலவசமாக பயன்படுத்தி லாபம் ஈட்டுவது சரியல்ல” என்று தெரிவித்துள்ளார்.
செய்தித்துறையில் முதலீடு செய்வது ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

2021-இல் அவுஸ்திரேலியா ‘News Media Bargaining Code’ என்ற சட்டத்தை கொண்டு வந்தது. அதன்படி, டிஜிட்டல் நிறுவனங்கள் செய்தி வெளியீட்டாளர்களுடன் ஒப்பந்தம் செய்து பணம் வழங்க வேண்டியிருந்தது.
ஆனால் சில நிறுவனங்கள் அந்த ஒப்பந்தங்களை புதுப்பிக்காமல், தங்கள் சேவைகளில் செய்திகளை நீக்கிவிட்டன.
இந்த புதிய சட்டத்தின் படி, ஒப்பந்தம் செய்யாத நிறுவனங்கள் அவுஸ்திரேலிய வருவாயில் 2.25 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
இதனால் ஆண்டுக்கு 200-250 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வருவாய் கிடைக்கும் என அரசு எதிர்பார்க்கிறது.
அந்த தொகை, செய்தியாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்தி நிறுவனங்களுக்கு பகிரப்படும்.
மெட்டா, இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “செய்தி நிறுவனங்கள் தாமாகவே எங்கள் தளங்களில் உள்ளடக்கங்களை வெளியிடுகின்றன. அதற்காக நாங்கள் அவர்களின் செய்திகளை ‘எடுத்துக்கொள்கிறோம்’ என்பது தவறான குற்றச்சாட்டு” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |