'குடிமக்களுக்கு மட்டும் தான் அனுமதி' உடனடியாக 9 நாடுகளுக்கு தடை அறிவித்த அவுஸ்திரேலியா
COVID-19 வைரஸின் புதிய Omicron மாறுபாடு உலகிற்கே புதிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், 9 ஆப்பிரிக்க நாடுகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது அவுஸ்திரேலியா.
தென்னாப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோதோ, எஸ்வதினி, சீஷெல்ஸ், மலாவி மற்றும் மொசாம்பிக் ஆகிய 9 நாடுகளுக்கு அவுஸ்திரேலியா பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
இந்த கட்டுப்பாடு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், அந்த நாடுகளில் இருக்கும் குடிமக்கள் அல்லாதவர்கள் நுழைவதை அவுஸ்திரேலிய அரசாங்கம் தடை செய்யும்.
மேலும் நாடு திரும்பும் அவுஸ்திரேலிய குடிமக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மேற்பார்வையிடப்பட்ட 14 நாள் தனிமைப்படுத்தல் தேவைப்படும் என்று அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் கூறினார்.
கடந்த 14 நாட்களுக்குள், இந்த 9 நாடுகளில் ஒன்றில் பயணம் செய்து திரும்பும், சர்வதேச மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் போன்றவர்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும்.
மேலும், புதிய அல்லது கடுமையான நடவடிக்கைகள் தேவைப்பட்டால், அவற்றை எடுக்க தயங்க மாட்டோம் என்று கிரெக் ஹன்ட் கூறினார்.
ஏற்கனவே அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்கள் மற்றும் கடந்த 14 நாட்களுக்குள் அந்த 9 நாடுகளில் ஏதேனும் ஒன்றில் இருந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது தென்னாப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் இரண்டு வாரங்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தடை செய்யும்.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 20 பயணிகள் வடக்கு பிராந்தியத்தின் ஹோவர்ட் ஸ்பிரிங்ஸ் வசதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 19 பேர் பாதிக்கப்படவில்லை என சோதனையில் தெரியவந்துள்ளது.
ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது , அனால் அவர் Omicron வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது இன்னும் தெரியவில்லை என்று ஹன்ட் கூறினார்.