தடுப்பூசி போட்ட 5 நாட்களில் பரிதாபமாக உயிரிழந்த பெண்! அவசரகால முடிவெடுத்த அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவில் 48 வயதான பெண் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்ட அடுத்த 5 நாட்களில் உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள லேக் மெக்குவாரி பகுதியைச் சேர்ந்த 48 வயதான அப்பெண்ணுக்கு கடந்த ஏப்ரல் 9-ஆம் திகதி அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது.
அடுத்த நாளே, அவருக்கு உடலில் பல இடங்களில் இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டு டயாலிசிஸில் வைக்கப்பட்டார்.
அப்பெண்ணுக்கு நீரிழிவு நோய் இருந்துள்ளது. மற்றபடி நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை மரணமடைந்தார்.
நியூ சவுத் வேல்ஸ் சுகாதார செய்தித் தொடர்பாளர் ஒருவர், தடுப்பூசிக்கும் அவரது மரணத்திற்கும் எந்த தொடர்பையும் மருத்துவர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என கூறியுள்ளார்.
ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (EMA) கடந்த வாரம் அரிதான இரத்த உறைவு பிரச்சினை காரணமாக அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை எச்சரிக்கையுடன் பயன்படுத்த அறிவுறுத்திய நிலையில், அவுஸ்திரேலியாவில் 48 வயதான பெண் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் மீதான அச்சம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அவுஸ்திரேலியா அரசு இனி அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என அவசரகால முடிவை எடுத்துள்ளது.
உலகிலேயே முதல் நாடாக டென்மார்க் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்தவே கூடாது என முடிவெடுத்தது.
மேலும் பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் 55 அல்லது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் அதனை பயன்படுத்த தீர்மானித்துள்ளது.