இந்தியாவில் சிக்கியுள்ள 30 அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்: நாடு திரும்பினால் கைது உறுதி
இந்தியாவில் தற்போதைய கொரோனா சூழலால் 30-கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளில் தங்கியிருப்போர்களுக்கு நாட்டுக்குள் அனுமதி இல்லை என அவுஸ்திரேலியா அரசு அறிவித்துள்ள நிலையில், சுமார் 9,000 பேர் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர்.
இதில் ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்கும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் உட்பட 12 வீரர்களும், பல்வேறு அணிகளுக்காக பயிற்சியாளர்களாக பணியாற்றும் 11 முன்னாள் வீரர்களும், தொழில்நுட்ப வீரர்கள் ஐவர், நான்கு வர்ணனையாளர்கள் மற்றும் 2 நடுவர்களும் அடங்குவர்.
இந்தியா மிக மோசமான சூழலில் தத்தளித்து வரும் நிலையில், ஐ.பி.எல் போட்டிகளை ரத்து செய்ய கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உரிய நிர்வாகத்தால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், இந்தியாவில் இருந்து நேரடியாகவோ, அல்லது மலேசியா, சிங்கப்பூர் வழியாகவோ நாடு திரும்பும் அவுஸ்திரேலிய மக்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும், 5 ஆண்டுகள் வரை சிறைவாசமோ அல்லது 37,000 பவுண்டுகள் அபராதமோ விதிக்கப்படும் என அவுஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே, ஆடம் ஜாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகிய இருவரும் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகுவதாக கூறி, இந்தியாவில் இருந்து கட்டார் சென்று, அங்கிருந்து வியாழக்கிழமை மெல்போர்ன் சென்றடைந்துள்ளனர்.
அவுஸ்திரேலியா மட்டுமின்றி, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவும் இந்தியாவில் இருந்து பயணத்தடையை அறிவித்துள்ளது.