உதவித் தொகையுடன் அகதிகளை நாடுகடத்த முடிவு செய்துள்ள ஐரோப்பிய நாடு
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்த சிரிய அகதிகளின் நிலை தொடர்பில் ஆஸ்திரியா பரிசீலனை செய்து வருவதாக சேன்ஸலர் கார்ல் நெஹாம்மர் தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தப்படுவதை அனுமதிக்க
சிரிய அகதிகள் இனி அரசியல் துன்புறுத்தலுக்கு பயப்பட வேண்டியதில்லை என்பது தொடர்பான கடிதம் ஒன்று வெளியான நிலையிலேயே சேன்ஸலர் கார்ல் நெஹாம்மர் விளக்கமளித்துள்ளார்.
மட்டுமின்றி, சிரியாவின் பாதுகாப்பு நிலைமையை மறுஆய்வு செய்து அங்கு நாடு கடத்தப்படுவதை அனுமதிக்க வேண்டும் என்றார். இருப்பினும், சிரியா அகதிகள் தாமாகவே முன்வந்து நாடு திரும்ப கோரினால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் 1,000 யூரோ உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் கார்ல் நெஹாம்மர் தெரிவித்துள்ளார்.
சிரியர்களின் புகலிடக் கோரிக்கைகளை செயலாக்குவதை இடைநிறுத்திய ஒரு டசின் ஐரோப்பிய நாடுகளில் ஆஸ்திரியாவும் ஒன்று. மேலும், 5 ஆண்டுகளுக்கும் குறைவாக நாட்டில் இருக்கும் சிரியர்களின் பாதுகாப்பிற்கான தகுதியை ஆஸ்திரியா இப்போது மதிப்பாய்வு செய்து வருகிறது என அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரிய சட்டமானது சில சந்தர்ப்பங்களில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் அதை ரத்து செய்யவும் அனுமதிக்கிறது. ஆஸ்திரியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களின் மிகப்பெரிய எண்ணிக்கை சிரியர்கள் என்றே கூறப்படுகிறது.
புலம்பெயர் கொள்கை
மட்டுமின்றி, நெஹாம்மரின் OVP கட்சியானது புலம்பெயர் கொள்கைகளை கடுமையாக்கியுள்ளது. செப்டம்பர் 29ம் திகதி நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் FPO கட்சி வெற்றி பெற்றது. ஆனால் 29 சதவிகித வாக்குகளை மட்டுமே கைப்பற்றியது.
இதனால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்கும் அரசாங்கத்தை அமைப்பதற்கும் ஒரு கூட்டணிக் கட்சி தேவைப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதுவரை எவரும் ஆட்சி அமைக்க உரிமை கோராததை அடுத்து ஆஸ்திரியாவின் ஜனாதிபதி புதிய அரசாங்கத்தை அமைக்க நெஹாம்மரை பணித்தார். தற்போது அவர் கூட்டணி ஆட்சி அமைக்கும் பொருட்டு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |