ஏர் இந்தியா விமான விபத்திற்கு மென்பொருள் கோளாறு காரணமா? நிபுணர் சொல்வது என்ன?
ஏர் இந்தியா விமான விபத்திற்கு மென்பொருள் கோளாறு காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா விமான விபத்து
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த ஜூன் 13 ஆம் திகதி லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில், மேகானி நகரில் இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தில் விழுந்து விபத்தை சந்தித்தது.
இந்த விமானத்தில், பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்த நிலையில், ஒருவர் மட்டும் உயிர் பிழைக்க குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம், குறித்து மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. விமானத்தின் கருப்பு பெட்டியை அமெரிக்காவிற்கு அனுப்பி, அதன் விவரங்கள் கோரப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
இந்நிலையில், முன்னாள் அமெரிக்க போக்குவரத்துத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலும் விமானப் போக்குவரத்து வழக்கறிஞருமான மேரி ஷியாவோ, இந்த விமான விபத்திற்கு மென்பொருள் கோளாறு காரணமாக இருக்கலாம் என கவலை தெரிவித்துள்ளார்.
போயிங் 787 விமானத்தில் உள்ள த்ரஸ்ட் கண்ட்ரோல் மால்ஃபங்க்ஷன் அக்காமடேஷன் (TCMA) என்ற பாதுகாப்பு அமைப்பில் உள்ள குறைபாட்டை சுட்டிக்காட்டினார்.
இது முழு அதிகார டிஜிட்டல் எஞ்சின் கண்ட்ரோல் (FADEC) மூலம் எஞ்சின் செயல்திறனைக் கட்டுப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கணினி அடிப்படையிலான அமைப்பு, விமானம் தரையில் இருப்பதை தவறாக உணர்ந்தால், விமானியின் உள்ளீடு இல்லாமல் தானாகவே எஞ்சின் உந்துதலைக் குறைக்க முடியும்.
இவ்வாறாக விமானம் கீழே இருப்பதாக நினைத்து, எஞ்சினை இந்த மென்பொருள் அணைத்து இருக்கலாம். விமானம் பறக்கும் போது, இப்படி நடந்ததால் விமானம் கீழே விழுந்து விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று அவர் கூறி உள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஜப்பான் ஏர் நிப்பான் ஏர்வேஸ் (ANA) சம்பவத்தை, NTSB விசாரித்ததில், இதேபோன்ற இரட்டை எஞ்சின் ரோல்பேக் மென்பொருள் குறைபாடு இருந்ததை கண்டறிந்ததாக ஷியாவோ உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், ஏற்கனவே போயிங் 787 விமானங்களில் இதே போன்ற செயலிழப்பு நிகழ்ந்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தற்போது, ஏர் இந்தியா விமானத்தில் இருந்த கறுப்புப்பெட்டியை விமான விபத்து புலனாய்வு பிரிவு ஆய்வு செய்து வருகிறது. இதனால் விரைவில் விமான விபத்திற்கான காரணம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |