தியேட்டரில் பிழையுடன் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகம்.., முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சிறுமி
தியேட்டரில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்துப்பிழை இருந்ததால் முதலமைச்சருக்கு 5 -ம் வகுப்பு படிக்கும் சிறுமி கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சருக்கு கடிதம்
தமிழக மாவட்டமான கோயம்புத்தூர், பீளமேடு அடுத்த காந்திமாநகர் ஹட்கோ காலனியை சேர்ந்த தம்பதியினர் பழனிச்சாமி மற்றும் கிருத்திகா. இவர்களுக்கு பிரணவிகா (வயது10) என்ற 5 -ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.
இந்நிலையில், இவர் தனது குடும்பத்துடன் கடந்த 6-ம் திகதி அன்று பிரபல மாலில் உள்ள தியேட்டருக்கு சென்றுள்ளார். அப்போது, படம் தொடங்குவதற்கு முன்பாக போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு வாசகம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
அதில், "புகைப்பிடித்தால் புற்றுநோய் உருவாகும் மற்றும் உயிரைக் கொள்ளும்" என்ற வாசகம் வந்தது. அதாவது கொல்லும் என்பதற்கு பதிலாக கொள்ளும் என்று பிழையுடன் இருந்துள்ளது.
இதனை பார்த்த சிறுமி, தவறாக இருப்பதாக தனது தந்தையுடன் கூறியுள்ளார். இதனை பார்க்கும் பல லட்சம் மக்களும், குழந்தைகளும் எழுத்துப் பிழையுடனே எழுதுவதற்கு வாய்ப்பு உள்ளதாக நினைத்த சிறுமி தனது தந்தையுடன் சென்று திரையரங்கு மேலாளரிடம் கூறியுள்ளார்.
அதற்கு அவர், இந்த படத்தின் காப்பி மும்பையில் இருந்து வந்துள்ளது. இதனால் எங்களால் மாற்ற இயலாது என்று கூறியுள்ளார்.
பின்னர் வீட்டிற்கு வந்த சிறுமி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், "தியேட்டரில் ஒளிபரப்பான விழிப்புணர்வு வாசகத்தில் எழுத்து பிழை உள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |