உக்ரைன் போரில் சண்டை போட கிளம்பும் தந்தை! ராணுவ உடை மீது படுத்த குழந்தை... உலகை உலுக்கிய புகைப்படம்
உக்ரைன் - ரஷ்யா போர் சண்டை தொடரும் நிலையில் ராணுவ சீருடை மேல் ஒரு குழந்தை படுத்துறங்கும் புகைப்படம் ஒன்று உலகளவில் வைரலாகியுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. இந்த போரால், லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
உலகெங்கும் நடக்கும் போர்களின் கொடூர முகத்தை அவ்வப்போது சில புகைப்படங்கள் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் உக்ரைனில் தந்தையைப் பிரிந்து செல்லும் மகளின் கண்ணீர் வீடியோ, ராணுவ உடையணிந்து கண் கலங்கப் பாடல் பாடும் சிறுமியின் வீடியோ என போர்க்களத்தில் மனதை நொறுக்கும் வீடியோக்களும், புகைப்படங்களும் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் ராணுவ சீருடை மேல் ஒரு குழந்தை படுத்துறங்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. போருக்கு கிளம்பும் ஒருவர் தனது ராணுவ சீருடை, காலணி, தொலைதொடர்பு கருவிகள் உள்ளிட்ட பொருட்களை அடுக்கி தயாராக வைத்திருக்கிறார்.
அதன் மேல் அந்த குழந்தை எந்தவித சலனமில்லாமல் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
இப்புகைப்படத்தை பார்க்கும் பலரும், இந்த குழந்தையின் புகைப்படம் போர் வேண்டாம் என்று ஓங்கி ஒலிக்கவில்லையா? போருக்கு செல்லாதீர்கள் என தந்தையின் உடையின் மீது படுத்திருப்பது போல தோன்றவில்லையா என கருத்து தெரிவித்துள்ளனர்.