பிரித்தானிய பிரதமர் பதவிக்கு குறிவைக்கும் தலைவர்கள் இப்படிப்பட்டவர்களா?
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பதவிக்கு குறிவைத்துவருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
ஸ்டார்மரின் லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல், பிற கட்சித் தலைவர்கள் வரை பிரதமர் பதவியைப் பிடிக்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
ஆனால், அவர்களுடைய பின்னணியைப் பார்த்தால், கெய்ர் ஸ்டார்மரைப்போல் சுத்தமான கைகளுக்குச் சொந்தக்காரர்கள் அல்ல அவர்கள் என்பது தெரியவருகிறது.
பிரித்தானிய பிரதமர் பதவிக்கு குறிவைக்கும் தலைவர்கள்
இப்படிப்பட்டவர்களா? சமீப காலமாக மக்கள் மனதில் இடம்பிடித்துவரும், அடுத்த பிரதமர் இவர்தானோ என்ற எண்ணத்தை உருவாக்கி வரும் அரசியல்வாதி யூகே ரீஃபார்ம் கட்சியின் தலைவரான நைஜல் ஃபராஜ்.

ஆனால், நைஜல் ஃபராஜ், தாய்லாந்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவரிடமிருந்து 5 மில்லியன் பவுண்டுகளைப் பெற்றுக்கொண்டு அதைக் குறித்து தெரியப்படுத்தாததால் விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளார்.
ரீஃபார்ம் கட்சித் தலைவரான நைஜல் ஃபராஜ், பொதுத்தேர்தலுக்கு சற்று முன் கிறிஸ்டோபர் ஹார்போன் (Christopher Harborne) என்பவரிடமிருந்து 5 மில்லியன் பவுண்டுகளைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
தான் அந்த பணத்தை தன் பாதுகாப்புக்காக அதாவது செக்யூரிட்டிக்காக பயன்படுத்தியதாக நைஜல் தெரிவித்துள்ளார்.
ஆனால், நைஜல் விசாரணைக்குட்படுத்தப்பட்டு விதிமீறலில் ஈடுபட்டது தெரியவந்தால், அவர் தனது பதவியை இழக்கக்கூடும். அதாவது, தன் தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடவேண்டியிருக்கும்.
நைஜல் ஃபராஜ் மீது இப்படி ஒரு குற்றச்சாட்டு என்றால், கிரீன்ஸ் கட்சித் தலைவரான ஸாக் போலன்ஸ்கி மீதும் ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

ஸாக், கிழக்கு லண்டனில் படகு வீடு ஒன்றில் வசித்துவந்ததாக குறிப்பிட்டுள்ளார். அதுதான் தன் வீடு என அவர் குறிப்பிட்டுள்ள நிலையில், அது அவரது வீடானால், அதற்கு அவர் கவுன்சில் வரி கட்டவேண்டும்.
ஆனால், ஸாக் கவுன்சில் வரி கட்டவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அதை கிரீன்ஸ் கட்சியும் ஒப்புக்கொண்டுள்ளதுடன், அவர் வேண்டுமென்றே அந்தத் தவறைச் செய்யவில்லை என்றும், தவறுதலாக வரி கட்டாமல் விட்டு விட்டதாகவும், வரி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுத்துள்ளதாகவும் கிரீன்ஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், கடந்த ஆண்டு வீடு ஒன்றை வாங்கிய அப்போதைய துணைப் பிரதமரான ஏஞ்சலா ரெய்னர் சரியான அளவிலான வரியைச் செலுத்தவில்லை என புகார் எழுந்தது.
அதைத் தொடர்ந்து, தனது துணைப்பிரதமர் பதவியையே ஏஞ்சலா ராஜினாமா செய்தார்.
ஆக, ஏஞ்சலா வரி செலுத்தாதது தவறென்றால், ஸாக் வரி செலுத்தாததும் தவறுதான்.
ஆக மொத்தத்தில், பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகத் துடிக்கும் கட்சித் தலைவர்களின் பின்னணியைப் பார்த்தால், அவர்களில் சிலர் சுத்தமான கைகளுக்குச் சொந்தக்காரர்கள் அல்ல என தெரியவந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |