ஆகஸ்ட் 11 ஆம் திகதியை சுதந்திர தினமாக அறிவித்துள்ள பலுச்சிஸ்தான் - பாகிஸ்தான் மௌனம்
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் ஆகஸ்ட் 11 ஆம் திகதியை சுதந்திர தினமாக அறிவித்துள்ளது.
சுதந்திர தினத்தை அறிவித்துள்ள பலுச்சிஸ்தான்
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம் ஆகும்.
பல ஆண்டுகளாகவே, பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி, பலுச் விடுதலைப் படையினர்(BLA) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆகஸ்ட் 11 ஆம் திகதியை ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமாக கொண்டாடப்போவதாக பலுசிஸ்தான் அமைப்புகள் அறிவித்துள்ளன.
மேலும், பலூசிஸ்தான் சுதந்திரத்தை சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 14 ஆம் திகதி கொண்டாடி வரும் நிலையில், 3 நாட்களுக்கு முன்னதாக ஆகஸ்ட் 11 ஆம் திகதியை பலுசிஸ்தான் சுதந்திர தினமாக அறிவித்துள்ளது.
முன்னதாக பிரித்தானியர்கள் இந்த துணைக்கண்டத்தை விட்டு வெளியேறியபோது, 1947 ஆகஸ்ட் 11 அன்று பலுசிஸ்தான் தனது சுதந்திரத்தை அறிவித்தது.
ஆனால், அதன் பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆக்கிரமிப்பு மூலம், சுதந்திர நாடாக செயல் பட்டு வந்த பலுசிஸ்தானை, 1948 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் திகதி பாகிஸ்தான் உடன் இணைக்கப்பட்டது.
பாகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் பலூச் மக்கள், பலூசிஸ்தான் கொடியுடன் இந்த நாளை சுதந்திரதினமாக கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து பலூச் தலைவர் மிர் யார் பலோச் வெளியிட்டுள்ள பதிவில், "பலுசிஸ்தானின் ஆறு கோடி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி தங்கள் தேசிய சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.
இன்று நாம் நமது சுதந்திரத்தைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், பலுசிஸ்தானின் சுதந்திரம் சட்டப்பூர்வமாகவும், அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று உலகத்திடம் கோரும் ஒரு நிலையை அடைந்துள்ளோம்.
பலுசிஸ்தான் குடியரசு, இன்று முதல், பலுசிஸ்தானை பாகிஸ்தானின் ஒரு மாகாணம் என்று அழைப்பதற்கோ, எழுதுவதற்கோ அல்லது குறிப்பிடுவதற்கோ பதிலாக, அது ஒரு சுதந்திர நாடு என்று எழுதப்பட வேண்டும், படிக்கப்பட வேண்டும் மற்றும் அழைக்கப்பட வேண்டும் என்று முழு உலகத்திடமும் கோருகிறது.
Message of Independence of the Republic of Balochistan
— Mir Yar Baloch (@miryar_baloch) August 10, 2026
11 August, 2026
The six crore people of Balochistan celebrate their national independence day every year on the 11th of August. Today we have reached a stage where we do not merely celebrate our independence, but demand… pic.twitter.com/W1LT0LNajU
வெளியுறவுக் கொள்கை, பாதுகாப்பு, பொருளாதாரம், அரசியல் மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றின் அனைத்துப் பொறுப்புகளையும் தானே நிறைவேற்றிக் கொள்ளும் உரிமையை பலுசிஸ்தான் இப்போது கொண்டுள்ளது.
மிக விரைவில் கடவுச்சீட்டு, நாணயம், பலுசிஸ்தானின் ஊடக நிறுவனங்கள், பலுசிஸ்தான் வர்த்தக மற்றும் வணிக நிறுவனம் மற்றும் தூதரகங்களின் முறையான தொடக்கம் நடைபெறும், அதற்கான தேதிகள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்.
பலுசிஸ்தானின் குரலை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று, நமது மக்களின் குரலாக மாறியுள்ள உலகின், குறிப்பாக இந்தியாவின், துணிச்சலான பிரதான ஊடகங்களுக்கும், அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் பலுசிஸ்தான் குடியரசு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
பலுசிஸ்தானின் இந்த சுதந்திரதின அறிவிப்புக்கு இதுவரை பாகிஸ்தான் அரசு அதிகாரபூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதற்கு அதிகாரபூர்வமாக எதிர்வினையாற்றினால் அது சர்வதேச அளவில் கவனம் பெறும் என்பதால் பாகிஸ்தான் மௌனமாக இருந்து இதனை தவிர்த்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |