அதே தவறுகளை செய்தோம்! அவர்களும் பொறுப்பேற்க வேண்டும் - இந்திய அணியிடம் படுதோல்வி குறித்து பேசிய கேப்டன்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் வங்காளதேச அணி தோல்வியடைந்தது குறித்து அணித்தலைவர் நஜ்முல் ஷாண்டோ விளக்கம் அளித்துள்ளார்.
தொடரை கைப்பற்றிய இந்திய அணி
டெல்லியில் நேற்று நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 221 ஓட்டங்கள் குவித்தது. நிதிஷ் ரெட்டி 74 (34) ஓட்டங்களும், ரிங்கு சிங் 53 (29) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் ஆடிய வங்காளதேச அணி 135 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
நஜ்முல் ஷாண்டோ
இந்நிலையில் வங்காளதேச அணியின் தலைவர் நஜ்முல் ஷாண்டோ (Najmul Shanto) தோல்வி குறித்து கூறுகையில், "இந்த ஆட்டத்திலும் நாங்கள் கடந்த போட்டியில் செய்த அதே தவறுகளை செய்தோம் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக இது எங்களுக்கு நல்ல விடயம் அல்ல. நாங்கள் மேம்பட வேண்டும்.
இந்தப் போட்டியில் நாங்கள் பந்துவீசுவதாக எடுத்த முடிவானது நல்லது என்று நினைக்கிறேன். அந்த வகையில் நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு, அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம். ஆனால் 6-7 ஓவர்களுக்கு பிறகு அவர்கள் நன்றாக துடுப்பாட்டம் செய்தனர்.
அதன் பிறகு நாங்கள் எங்கள் திட்டங்களை செயல்படுத்தவில்லை. அதே சமயம் இந்த தோல்விக்கு துடுப்பாட்ட வீரர்களும் பொறுப்பேற்க வேண்டும். நம் மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். ஆனால் நான் சொன்னது போல் எங்களால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை" என தெரிவித்துள்ளார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |