தாய்லாந்தில் பேருந்து மீது மோதிய சரக்கு ரயில்: பயணிகள் 8 பேர் பலி 32 பேர் படுகாயம்
பாங்காக்கில் நிகழ்ந்த கோர ரயில் விபத்தில் 8 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் ரயில் விபத்து
சனிக்கிழமை மதியம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பேருந்து ஒன்றின் மீது சரக்கு ரயில் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது.
பாங்காக்கின் மக்காசன் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில் 8 பேர் வரை உயிரிழந்ததோடு, 32 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
சிவப்பு விளக்கு சமிஞ்சை காரணமாக பேருந்தானது ரயில் தண்டவாளத்தின் குறுக்கே நின்றதே இந்த விபத்துக்கான முக்கிய காரணமாக அமைந்தது என தாய்லாந்து போக்குவரத்தின் துணை அமைச்சர் சிரிபாங் அங்கசகுல்கியாத் தெரிவித்துள்ளார்.

ரயில் ஓட்டுநர் ரயிலின் வேகத்தை குறைக்க பிரேக்யை போட முயன்றாலும், சரக்கு ரயிலின் அதிகப்படியான எடை காரணமாக ரயில் பேருந்தின் மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பலியான 8 பேரும் பேருந்தில் பயணித்தவர்கள் என்றும், விபத்தின் போது பேருந்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக அமைச்சர் அங்கசகுல்கியாத் தெரிவித்துள்ளார்.
நேரில் பார்த்தவர்கள் வழங்கிய தகவலின் படி, பேருந்து மீது ரயில் மோதிய உடனே பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் அருகில் இருந்த கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களும் சேதமடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |