IPL ஒளிபரப்பு நிறுத்தம்; T20 உலகக்கிண்ண போட்டிகள் இந்தியாவிலிருந்து மாற்றம் - வங்கதேசம் திட்டம்
ஐபிஎல் தொடரில் இருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மான் நீக்கப்பட்டதற்கு எதிர்வினையாற்றும் வகையில் வங்கதேசம் திட்டமிட்டு வருகிறது.
முஸ்தஃபிசுர் ரஹ்மான் நீக்கம்
வங்கதேசத்தில் தொடர்ச்சியாக இந்துக்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை(Mustafizur Rahman) மினி ஏலத்தில் KKR அணி வாங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்காக பாஜக, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், KKR அணி உரிமையாளர் ஷாருக்கானுக்கு(Shah Rukh Khan) கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதனையடுத்து, BCCI அறிவுறுத்தலையடுத்து, ரூ.9.20 கோடிக்கு வாங்கப்பட்ட முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியில் இருந்து விடுவிப்பதாக KKR அறிவித்தது.
அதிரடி காட்டும் வங்கதேசம்
இந்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வங்கதேச அரசின் ஆலோசகரான ஆசிஃப் நஸ்ருல், பாகிஸ்தானை போல், 2026 T20 உலகக் கோப்பையில் வங்கதேச அணி விளையாடும் போட்டிகளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்றுமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், வங்கதேசத்தில் ஐபிஎல் ஒளிபரப்பு நிறுத்தம் செய்வதை உறுதிப்படுத்துமாறு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், "எந்தவொரு சூழ்நிலையிலும் வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் அல்லது வங்கதேசத்தை அவமதிப்பதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அடிமைத்தனத்தின் நாட்கள் முடிந்துவிட்டன" என கூறியுள்ளார்.
2016 முதல் ஐபிஎல் தொடர்களில் பங்குபெற்று வரும் முஸ்தஃபிசுர் ரஹ்மான், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |