இந்தியாவுடன் மோதல்... பல கோடிகள் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த அண்டை நாடு
இந்தியாவுடனான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், ரூ.180 கோடி மதிப்புள்ள பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை வங்கதேசம் ரத்து செய்துள்ளது.
இந்தியா ரத்து செய்தது
கொல்கத்தாவை தளமாகக் கொண்ட பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் GRSE என்ற நிறுவனத்துடனே அந்த ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வங்காளதேச மக்கள் குடியரசின் அரசாங்கம் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று உத்தியோகப்பூர்வ வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தமானது டாக்காவிற்கு ஒரு மேம்பட்ட கடல் செல்லும் இழுவை கப்பலை நிர்மாணிப்பதை உள்ளடக்கியதாகும். மூன்றாம் நாடுகளுக்கு வங்கதேச சரக்கு ஏற்றுமதிக்கான டிரான்ஷிப்மென்ட் வசதிகளை சமீபத்தில் இந்தியா ரத்து செய்ததை அடுத்தே, வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கடலின் பாதுகாவலர்
இதன் காரணமாகவே வங்கதேச அரசாங்கம் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. மட்டுமின்றி, வங்காளதேச இடைக்கால அரசாங்க தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் சமீபத்திய கருத்துக்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றே கூறப்படுகிறது.
சமீபத்தில் சீனாவிற்கு விஜயம் செய்திருந்த யூனுஸ், இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்கள் நிலத்தால் சூழப்பட்டவை என்றும் இந்தப் பகுதியில் வங்கதேசம் மட்டுமே கடலின் பாதுகாவலர் என்றும் விவரித்தார். இந்த கருத்துக்கு இந்தியா தரப்பில் அதிருப்தியை பதிவு செய்தனர்.
அத்துடன் மே 18 முதல் வங்கதேசத்தில் இருந்து பொருட்களின் இறக்குமதிக்கு இந்தியா குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளையும் விதித்தது. இதுவே தற்போது இந்தியாவுடனான முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை ரத்து செய்யவும், சீனா பக்கம் நகரவும் வங்கதேசத்தைத் தூண்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |