வங்கதேச வன்முறை - முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை
வங்கதேச வன்முறை வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
வங்கதேச வன்முறை
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ராணுவத்தில் உள்ள இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதால் வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 20,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பல்வேறு கட்டிடங்கள் தீ வைக்கப்பட்டன.
போராட்டக்காரர்கள் அப்போதைய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் அதிகார பூர்வ இல்லத்தை கைப்பற்றியதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் தப்பி இந்தியா வந்து தஞ்சமடைந்துள்ளார்.

ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடைபெற்று வருகிறது.
புதிய அரசு, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது ஊழல், மனித உரிமைக்கு எதிரான குற்றம் என பல்வேறு வழக்குகளை பதிவு செய்தது.

இந்த வழக்குகள், வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ICT) நடைபெற்று வருகின்றது.
முன்னதாக, விசாரணைக்கு ஆஜராகாத ஹசீனா மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டதோடு, அவரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
ஷேக் ஹசீனா குற்றவாளி
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பை வாசித்த நீதிபதி, "கடந்தாண்டு நடந்த போராட்டங்களில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 24,000 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அதிகாரத்தில் நீடிக்க ஷேக் ஹசீனா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்துள்ளார். கடுமையான ஆயுதங்களை பயன்படுத்தி சொந்த நாட்டு மக்களையே கொல்ல உத்தரவிட்டுள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி மறுக்கபட்டுள்ளது. ஷேக் ஹசீனா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளது" என தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றத்திற்கு, ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |