வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் ஜியா காலமானார்
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரான கலீதா ஜியா, நீண்டகாலமாக நோய் வாய்ப்பட்டிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தனது 80-வது வயதில் காலமானார்.
முதல் பெண் பிரதமர்
ஜியா நீண்டகாலமாக கல்லீரல் சுருக்க நோயின் முற்றிய நிலை, மூட்டுவலி, நீரிழிவு நோய், மார்பு மற்றும் இதயப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக அவர் டாக்காவில் உள்ள ஒரு சிறப்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போதைய பிரிக்கப்படாத தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஜல்பைகுரியில் 1946 ஆம் ஆண்டு பிறந்த ஜியா, 1991 முதல் மூன்று முறை வங்கதேசத்தின் பிரதமராகப் பதவி வகித்துள்ளார்.
வங்கதேச மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண் பிரதமரும் இவரே. வங்கதேசத்தின் முன்னாள் ஜனாதிபதியான ஜியாவுர் ரஹ்மானை மணந்திருந்தார்.
அவர், 1981-ல் படுகொலை செய்யப்பட்டார். ஜியாவுர் ரஹ்மான் வங்கதேசத்தின் ஜனாதிபதியானபோது, கலீதா ஜியா முதல் பெண்மணியாக அவருடன் இருந்தார்.
ஆட்சிக்கு முற்றுப்புள்ளி
கணவரின் மரணத்திற்குப் பிறகு, கலீதா பிஎன்பி கட்சியில் ஒரு சாதாரண உறுப்பினராகச் சேர்ந்தார், பின்னர் 1983-ல் அக்கட்சியின் துணைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். ஒரு வருடம் கழித்து, அந்தக் கட்சி அவரைத் தலைவராகத் தெரிவு செய்தது.

வங்கதேச இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் ஹுசைன் முஹம்மது எர்ஷாதின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, 1983-ஆம் ஆண்டில் ஏழு கட்சிக் கூட்டணியை உருவாக்கியதில் கலீதா முக்கியப் பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |