பாகிஸ்தானை பந்தாடிய வங்காளதேசம்! விமான விபத்தில் பலியானவர்களுக்கு அர்ப்பணிப்பு..கேப்டன் உருக்கம்
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை வங்காளதேச அணி கைப்பற்றியது.
ஜாகிர் அலி
வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி டாக்காவில் நேற்று நடந்தது.
முதலில் ஆடிய வங்காளதேச அணி 133 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அரைசதம் விளாசிய ஜாகிர் அலி (Jaker Ali) 48 பந்துகளில் 5 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 55 ஓட்டங்கள் குவித்தார்.
பாகிஸ்தானின் சல்மான் மிர்ஸா, அகமது டேனியல் மற்றும் அப்பாஸ் அப்ரிடி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பஹீம் அஷ்ரப் அதிரடி
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது. அணி 47 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் என்ற நிலையில் இருந்தபோது, பஹீம் அஷ்ரப் அதிரடியாக ஆடி வெற்றிக்காக போராடினார்.
எனினும் சோரிபுல் இஸ்லாம் தனது தாக்குதல் பந்துவீச்சில் பாகிஸ்தானை நிலைகுலைய செய்ய, அந்த அணி 19.2 ஓவரில் 125 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இதன்மூலம் வங்காளதேசம் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் வென்றது.
லித்தன் தாஸ் உருக்கம்
கடைசி வரை போராடிய பஹீம் அஷ்ரப் (Faheem Ashraf) 32 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் விளாசினார். சோரிபுல் இஸ்லாம் (Shoriful Islam) 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
வெற்றிக்கு பின்னர் பேசிய வங்காளதேச அணித்தலைவர் லித்தன் தாஸ் (Litton Das),
"எங்கள் அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. பவர்பிளேயில் நாங்கள் நன்றாக துடுப்பாட்டம் செய்ய வேண்டியிருந்தது.
ஆனால் எங்களால் முடியவில்லை. மஹிதி மற்றும் ஜாகிர் அலி துடுப்பாட்டம் செய்வதைப் பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது.
சமீபத்திய ஜெட் விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு இந்த தொடர் வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறேன்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |